2022 அக்டோபர் 30-ல் குஜராத் மாநிலம், மச் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், சுமார் 50 குழந்தைகள் உட்பட, 135 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள். இந்தக் கோர விபத்து நிகழ்ந்து ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், இன்னும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமம் அருகே ஒன்று கூடி, இத்தகைய விபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர்.
நூற்றாண்டு பழைமையான மச் பாலம், மிகவும் சேதமடைந்திருந்தது. அதனால், அந்தப் பாலத்தை அதிகாரிகள் பழுது நீக்கி, மறு சீரமைப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு திறந்து வைத்தனர். இந்த நிலையில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் அளவுக்கு அதிகமாய் அந்தப் பாலத்தில் குழுமியதால், தொங்கு பாலம் அறுந்து விழுந்து அதிலிருந்த மக்கள் ஆற்றில் மூழ்கினர்.

பாலத்தின் வரலாறு:
இந்தப் பாலம் நூற்றாண்டு பழைமையானது. மோர்பியிலுள்ள மச்சு ஆற்றின்மீது 230 மீட்டர் அளவில், 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்த பாலம் கட்டப்பட்டது. மோர்பியின் அரச காலத்தை நினைவூட்டும்விதமாக, இந்த பாலம் இருந்தது. மோர்பியின் மன்னர் சர் வாஜி தாகூர், நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தைக் கட்டினார். அந்த நேரத்தில் இதுவொரு கலை மற்றும் தொழில்நுட்ப அதிசயம் என்று அழைக்கப்பட்டது.
இந்த பாலம், 1879-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதியன்று மும்பையின் அப்போதைய கவர்னர் ரிச்சர்ட் டெம்பிளால் திறந்து வைக்கப்பட்டது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி:
இந்தக் கோர விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் நேற்றைய தினம், (அக்டோபர் 30, 2023) காலை குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்துக்கு எதிரே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அமர்ந்து, விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வை `Tragedy Victim Association – Morbi’ என்ற சங்கத்தினர் (விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம்) ஏற்பாடு செய்திருந்தனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் தலைவர் நரேந்திர பர்மர், “அனைவரையும் உலுக்கிய இந்தக் கோர விபத்து நடைபெற்று, இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகரிலுள்ள முதல்வர் இல்லம் வரை ‘ஷ்ரத்தாஞ்சலி யாத்திரை’ நடத்த முதலில் திட்டமிட்டிருந்தோம்.

இந்த யாத்திரையை நடத்த அரசு அனுமதி தராததால், சபர்மதி ஆசிரம சாலையில் ‘ஷ்ரத்தாஞ்சலி சபா’ என்ற அஞ்சலிக் கூட்டத்தை நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்களும், பட்டியல் சமூகத்தினரும் ஆவர். இந்தக் கூட்டத்தின் மூலம், இத்தனை உயிர்கள் பலியாவதற்குக் காரணமானோரை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை கைதுசெய்யப்பட்டிருப்பவர்களைத் தவிர, இந்த வழக்கு விசாரணையில் அலட்சியம் காட்டியதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் குறிப்பிடப்படுபவர்களையும் கைதுசெய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்போதுதான், இத்தகைய விஷயங்களில் அலட்சியமாகச் செயல்படுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள்” என்றார். நரேந்திர பர்மர், தன்னுடைய 10 வயது மகளை இந்த விபத்தில் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கணவன் இழந்து, இந்தக் கோர விபத்தில் தன்னுடைய 19 வயது மகன் அல்பாஸ் கானையும் இழந்த ஷபானா பதான் பேசுகையில், “நான் 14 வீடுகளுக்கு மேல் வீட்டு வேலை செய்து அதிலிருந்து வரும் வருவாயின் மூலமாக, என் மகனை வளர்த்து வந்தேன். இன்று என் மகன் என்னோடு இல்லை, இந்த இழப்புக்கு நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தாலும் ஈடாகாது. சாதாரணமாக ஒரு கொலைக்கு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை கொடுக்க முடியும் என்றால், இங்கு 135 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஒராண்டாகியும் இதற்குக் காரணமானவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை. ஒன்று அரசு வழக்கறிஞர் மாற்றப்பட வேண்டும், இல்லையேல் நீதிபதி மாற்றப்பட வேண்டும் இல்லையேல்… இதற்கு நீதி கிடைக்கும் வரை, நான் வெறுங்காலுடனே இருப்பேன், காலணி அணிய மாட்டேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்த விபத்து பற்றி விசாரிக்க அந்த மாநில அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி குழு, உயர் நீதிமன்றத்தில் சமர்பித்த இடைக்கால மற்றும் இறுதி அறிக்கையில், Oreva Group (Ajanta Manufacturing Limited) நிறுவனத்தின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படேலைத் தவிர, அவரது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர்கள் இருவர் மற்றும் விபத்து நடந்த பாலத்தை பழுதுபார்த்த இரண்டு துணை ஒப்பந்தக்காரர்களும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கைதுசெய்யப்பட்ட மூன்று பாதுகாப்பு காவலர்கள், இரண்டு டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள் சில மாதங்களுக்கு முன்பு குஜராத் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சுக் படேல் உட்பட 10 பேர்மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 304 (Culpable homicide not amounting), 308 (Attempt to commit culpable homicide), 336 (Act which endangers human life), 337 (Causing hurt to any person by doing any rash or negligent act) , 338 (Causing grievous hurt by doing rash or negligent act) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், பாலம் இடிந்து விழுந்ததற்கு Oreva Group நிறுவனத்தின் கவனக்குறைவும், அலட்சியப்போக்கும், தொழில்நுட்பக் குறைபாடுகளுமே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், `இந்த விபத்துக்கு முழு காரணம், Oreva Group-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் இரண்டு மேலாளர்கள் உட்பட நிறுவனத்தின் முழு நிர்வாகமும் பொறுப்பாகும். இது விபத்து அல்ல கொலை’ என, எஸ்.ஐ.டி கூறியிருந்தது.
இந்த நிலையில்தான், `ஓராண்டைக் கடந்தும், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!’ என பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com