புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த மண்ணில் பேசிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் தான் உரையாடலாகும். உரையாடல் தான் நல்ல சிந்தனையை பலமாக்கும். அந்த வகையில் வட மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசு பொருளை ஆரம்பித்து வைத்திருக்கிறார். வட மாநிலங்களில் உரையாடல் வரட்டும். அவர்களும் சிந்திக்கட்டும். சனாதனம் குறித்து திட்டமிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையை கிளப்பவில்லை.” என்றார்.
தொடர்ந்து, “இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்ற சர்வாதிகாரத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர். முதலில் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று கொண்டு வரட்டும். அதன்பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசலாம். புதுக்கோட்டையில் சிந்தெட்டிக் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு மத்திய அரசின் நிதி கோரி கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவிலேயே இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிடும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com