மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் தசரா அன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை இந்த ஆண்டும் உத்தவ் தாக்கரே பெற்றுக்கொண்டிருக்கிறார். மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று சிவசேனா சார்பாக நடக்கும் பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே உரையாற்றுவது வழக்கம். சிவசேனா இரண்டாக உடைந்த பிறகும், கடந்த ஆண்டு இரண்டு அணியினரும் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம்காட்டி, இரு தரப்பினருக்கும் பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுத்தது.

பின்னர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று தாதர் சிவாஜி பார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். இந்த ஆண்டும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அவரின ஆதரவு எம்.எல்.ஏ சதா சர்வான்கர், தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். உத்தவ் தாக்கரே தரப்பிலும் மனு கொடுக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு யாருக்குப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தாதர் சிவாஜி பார்க் சிவசேனாவுக்கு உணர்வுபூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவசேனா ஆரம்பிக்கும்போது பால் தாக்கரே, சிவாஜி பார்க்கில்தான் பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று பொதுக்கூட்டம் நடத்துவதை சிவசேனா வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு சிவாஜி பார்க்கில் பேரணி நடத்த அனுமதி கேட்டுக் கொடுத்திருந்த மனுவை, திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியினர் திரும்பப் பெற்றிருக்கின்றனர்.

விழா காலத்தில் இந்துக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கொடுக்கப்பட்டிருந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பதாக, எம்.எல்.ஏ சதா சர்வான்கர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் இந்த ஆண்டு உத்தவ் தாக்கரே அணியினர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்துவதிலிருந்த சிக்கல் நீங்கியிருக்கிறது. திட்டமிட்டபடி வரும் 24-ம் தேதி உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com