நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், இரண்டு பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அப்போது, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியிலிருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், விபத்தில் காயமடைந்தவர்களை தனது காரில் ஏற்றினார். அப்போது, சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து எம்.பி சின்ராஜும் தனது காரில் வந்து கொண்டிருந்தார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாததைக் கண்டு கடும் கோபமடைந்த எம்.பி சின்ராஜ், மருத்துவ அதிகாரியிடம் போனில் தொடர்பு கொண்டு இது குறித்து காட்டமாக பேசினார்.
இந்த நிலையில், பல்வேறு உடல் உபாதைகளுக்காக சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் அந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மேலும் கோபமடைந்த எம்.பி சின்ராஜ், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி காட்டமானார். இதனையடுத்து, மருத்துவ ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால், சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால், இருசக்கர வாகனத்தில் அடிபட்டவர்களை ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எம்.பி சின்ராஜ் அனுப்பி வைத்தார். இப்படி, மருத்துவர்கள் இல்லாததால், நாமக்கல் எம்.பி கோபமடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com