உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காணவிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து முக்கிய தலைவர்களுக்கும் மட்டும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள், `மதம் என்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால், ராமர் கோயிலை வைத்து பா.ஜ.க மத அரசியல் செய்கிறது’ எனக் கூறி, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டோம் என வெளிப்படையாகக் கூறிவிட்டன.
இதன்காரணமாக, இந்துக்களின் மனதை அவர்கள் புண்படுத்துவதாக பா.ஜ.க விமர்சனம் செய்யத்தொடங்கியது. இவ்வாறு, ராமர் கோயில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க-வும் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டு வந்த நிலையில், ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக பிரபல பாடகி சித்ரா கூறிய கருத்தால், சமூக வலைதளங்களில் பலர் அவருக்கெதிராக கருத்துகள் தெரிவிக்கத் தொடங்கியது, பேசுபொருளாகியிருக்கிறது.
அதவாது, `ராமர் கோயில் பிரதிஷ்டை நடக்கும் தினத்தில் ராம நாமம் ஜெபித்து, விளக்கேற்ற வேண்டும்’ எனப் பாடகி சித்ரா வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். இதனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரை எதிர்க்க, சித்ராவுக்கு பலர் ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூட, “கருத்து கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. கருத்து கூறியதற்காக சைபர் தாக்குதல் நடத்துவது பாசிசமாகும்” என்று சித்ராவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார்.
அந்த வரிசையில் தற்போது, தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினரும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு, சித்ராவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து குஷ்பு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்புத்தன்மையின்மை உச்சத்தில் இருக்கிறது. அவர்களால், மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க முடியாது. அதற்கென்று தைரியம் வேண்டும். எனவே, நான் முழுமையாக சித்ராவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com