கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 638 அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டத்தில் 8 ஊராட்சிகளில் 14 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 16.9.2022 அன்று முதல் துவங்கியது. மீதமுள்ள 8 வட்டங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்களில் உள்ள 638 அரசு தொடக்கப் பள்ளிகளில் நாளை 25ம் தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டம் 8 ஊராட்சிகளில் 14 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்களில் உள்ள 638 அரசு தொடக்கப் பள்ளிகளில் நாளை முதல் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் காலை 6:00 மணிக்கு சமையல் பணிகளை தொடங்க வேண்டும். உணவை குழந்தைகளுக்கு காலை 8:45 மணிக்குள் சூடாக வழங்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் சுய உதவிக் குழு மையப் பொறுப்பாளர்களால் பராமரிக்கப்படும் வருகை பதிவின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் சராசரி எண்ணிக்கைகளில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
மொபைல் செயலியில் உணவு சமைக்க துவங்கும் முன், சமைத்த பின் மற்றும் உணவு மாணவர்களுக்கு பரிமாரப்பட்ட பிறகும், தினசரி உரிய நேரத்தில் பதிவு செய்வதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
காலை உணவு சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாகவும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்று பெற்றுப்பட்டதா என உறுதி செய்யவேண்டும். தரமற்ற பொருட்கள் எதுவும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், முன் மொழியப்பட்ட அளவின் படியும் இருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் பொருட்களான அரிசி, உப்பு, எண்ணெய் சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற முக்கிய பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
உணவை சமைக்கும்போது தன் சுத்தம் பராமரிப்பதுடன், சுத்தமான உடை அணிந்து சுகாதாரமாக இருக்க வேண்டும். அலுவலர்கள் தினசரி தொடர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என, கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் சுந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராணி, உதவி திட்ட அலுவலர்கள், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com