தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் பெற செலவு செய்யப்பட்ட ரூ.3.48 கோடிக்கு முறையான ரசீதுகள் சமர்ப்பிக்காமல் முறைகேடு நடந்துள்ளதாக மருத்துவக்கல்லுாரி இயக்குனருக்கு தற்போதைய முதல்வர் திருநாவுக்கரசு அறிக்கை அனுப்பி உள்ளார்.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 2004 டிச., 8 ல் திறக்கப்பட்டது. தற்போது 1200 படுக்கைகளுடன் அனைத்து சிகிச்சை வசதிகளும் கொண்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் 100 மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 2006 அங்கீகாரம் வழங்கியும், டி.எம்.எல்.டி., நர்சிங், பாரா மெடிக்கல் என 8 பிரிவுகளில் கற்பித்தல் பணி நடக்கிறது.
இக்கல்லுாரியில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர் சேர்க்கை ஒதுக்கீடும் உள்ளது.
வாரிய அதிகாரிகள் ஆய்வு
2022ல் தேசிய தரச்சான்று ஆய்வாளர்களாக வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் ஜெய்கணேஷ், மயிலாடுதுறை இணை இயக்குனர் டாக்டர் குருநாதன், டாக்டர் ரியாஷ், டாக்டர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அவர்களின் இறுதி அறிக்கையின் படி, மருத்துவக் கல்லுாரிகளுக்கான தேசிய தர அங்கீகார வாரியம்,தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 2023 ஜூலை 25 முதல் 2025 ஜூலை 25 வரை மூன்றாண்டுகளுக்கான தேசிய தர நிர்ணய சான்றிதழை வழங்கி உள்ளது.
தரச்சான்று பெறுவதற்காக நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இம்முறைகேடு குறித்து மருத்துவக்கல்வி இயக்குனருக்கு தற்போதைய தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு அறிக்கை அளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் திருநாவுக்கரசு கூறியதாவது: எனக்கு முன் இருந்த நிர்வாகத்தின் சார்பில் தேசிய தரச்சான்று பெற ரூ.3 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து278 என செலவுத்தொகை காட்டப்பட்டுள்ளது.
அதில் விளம்பரத்திற்காக ரூ.29,485, விண்ணப்பச் செலவுக்காக ரூ.61,360, உட்கட்டமைப்பு சுகாதாரப்பணிக்காக ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்து 464, உட்கட்டமைப்பு கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்காக ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 106, படிவங்கள் மற்றும் ஸ்டேஷனரி செலவு தொகையாக ரூ.25 லட்சத்து 43 ஆயிரத்து 445 செலவிடப்பட்டுள்ளது.
உணவு, பயண செலவிற்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 730, உட்கட்டமைப்பு மருத்துவ வசதி, கருவிகளுக்காக ரூ.1 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரத்து 509 செலவிடப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்ஸ் மற்றும் போர்டுகளுக்கு ரூ.11 லட்சத்து 53 ஆயிரத்து 432, தீ தடுப்பு பாதுகாப்பிற்காக ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 995, பொதுப்பணித்துறை பணிக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம், இப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியமாக ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 918 என மொத்தம் ரூ.3 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 278 என செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதற்கான பொதுப்பணித்துறை மற்றும் ஸ்டேஷனரிக்கு முறையான ரசீதுகள் சமர்பிக்கப்படவில்லை. வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் தரமின்றி செயல்படாமல் உள்ளன. இவ்விவரங்கள் துறை தணிக்கையில் கண்டறியப்பட்டது. எனவே அறிக்கையாக மருத்துவக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குனர் உத்தரவில் விரிவான ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது,’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com