தேனி: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தவறான வழிமுறைகளை கையாளாமல் காயம்பட்ட பகுதிகளை குளிர்ந்த நீரில் வைப்பது அவசியம்.’ என தேனி மாவட்ட தோல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ரூபன்ராஜ் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நவ., 12ல் கொண்டாடப்பட உள்ளதால் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. பட்டாசுகளை பாதுகாபற்ற முறையில் வெடிப்பதால் சிறார்கள், பெண்கள் காயமடைவது தொடர்கிறது. பட்டாசு வெடிக்கும் போது காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் நடைமுறைகள் குறித்தும் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.ரூபன்ராஜ் பேசியதாவது:
எதிர்பாராமல் தீக்காயம் ஏற்பட்டால் என்ன தற்காப்பு முறைகளை கையாள வேண்டும்.
முதலில் செய்ய வேண்டியது காயம்பட்ட இடத்தை குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது குளிர்ந்த நீரில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அடுத்தாக சோற்றுக்கற்றாழை ஜெல் இடலாம். அதுவும் இல்லை என்றால் பாதுகாப்பிற்காக சோப்பால் கழிவிவிட்டு, ஒரு சதவீத எஸ்.எஸ்.டி., கிரீம் தடவலாம். பின் காயத்திற்கு தகுந்தபடி விரைவாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.
பதட்டத்தில் சிலர் மஞ்சள்துாள், மை போன்றவைகளை பயன்படுத்துவது சரியா
இது முற்றிலும் தவறு. மேல்தோல் பாதிப்பு, புறத்தோல் பாதிப்பு, அடித்தோல், தசை எலும்பு பாதிப்பு என தீக்காயப் பாதிப்புகளை வரையறுத்து தோல் சிகிச்சையில் சிகிச்சை முறைகள் உள்ளன. காற்றில் உள்ள கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உடலில் உட்செல்லாமல் உடல்திறனை, உடல் இயக்கத்தை பாதுகாப்பது தோல்தான். மனிதனுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சமாகவும் உள்ளது. தீக்காயம் ஏற்பட்ட உடன், பாக்டீரியாக்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட தோல் வழியாக ரத்தத்தில் கலந்து, பல்கி பெருகிவிடும். அதனால்தான் சிகிச்சை முறையில் 15 சதவீத பாதிப்படைந்தவர்கள் மட்டுமே வெளிநோயாளிகள் பிரிவிலும், 20 சதவீத பாதிப்பு என்றால் மருத்துவமனை உள்நோயாளியாக கருதி சிகிச்சை அளிப்போம்.
அதற்கு மேல் பாதிப்பு என்றால் தீக்காய சிறப்பு சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு செல்வோம். 60 சதவீத பாதிப்பு என்றால் முதல் நாள் நன்றாக இருப்பார், அடுத்த 5 நாட்களில் பாதிக்கப்பட்டவரின் உள்ளுருப்புகள் பாதிப்படைந்து இறக்க நேரிடலாம். எனவே தோல் மனிதர்களுக்கு இன்றியமையாத பாகமாக உள்ளது.
தீக்காய பாதிப்பை எவ்வாறு கணக்கிடுவார்கள்
மனித உடலில் முன் பகுதி தலை பகுதியை 4.5 சதவீதம், மார்புப் பகுதி 9 சதவீதம், வலது கை 4.5 சதவீதம், வயிற்றுப்பகுதி 9 சதவீதம், வலது முழங்கால், இடது முழங்கால் தலா 9 சதவீதம் எனவும், பின்பகுதியிலும் இதே அளவில் அளவீடு செய்யப்பட்டு, பாதிப்பின் சதவீதங்களை கணகிட்டு, சிகிச்சை முறைகள் மாறுபடும்.
தீ கொப்பளங்களை உடைத்து விடுவது சரியா
சுத்தப்படுத்தப்படாத ஊசி, துருப்பிடித்த பொருட்கள், நகங்களால் தீக்காய கொப்பளங்களை உடைத்துவிடுவது தவறு. இதனை ஒருபோதும் செய்யக்கூடாது. இதனால் பாதிக்கப்படாத இடங்களுக்கும் காயங்கள் பரவும். மருந்து கடைகளில் ஸ்டிராய்டு ஊசிகளை வாங்கி பயன்படுத்தி, ஒரு சதவீத எஸ்.எஸ்.டி., கிரீமை அப்ளை செய்து, மருத்துவமனைக்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.
தோல் வங்கிகள் பயன்பாடு பற்றி
சென்னை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தோல் வங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அங்கு தோல் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உரிய தேவையான மேல், புற, அடித்தோல் என மாற்றும் வசதி உள்ளது. விரைவில் பிற மாவட்டங்களிலும் தோல் சேமிப்பு வங்கிகள் துவங்கப்பட உள்ளது.
பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க ஆலோசனை
பெற்றோர் கண்காணிப்பில் சிறார்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். அருகில் மணல், வாளியில் தணணீர் வைத்துக் கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நன்றி
Publisher: www.dinamalar.com