பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். அதன் அடிப்படையில் நிதிஷ் குமார் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இது தவிர அவர் ஒன்பதாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
பா.ஜ.க-வை சேர்ந்த சாம்ராட் செளதரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். மேலும் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். `பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் கோஷம்” முழங்க அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.


மக்களவைத் தேர்தலை சந்திக்க பா.ஜ.க முழுவேகத்தில் தயாராகிவிட்டது. எனவேதான் நிதிஷ் குமாரை தங்களது அணிக்கு கொண்டு வந்துள்ளது. நிதிஷ் குமாரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தில், பா.ஜ.க பக்கம் திரும்பி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, சிவசேனாவின் ஒரு பிரிவை பயன்படுத்தி பா.ஜ.க ஆட்சியமைத்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்த மற்றொரு முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பா.ஜ.க இரண்டாக உடைத்துவிட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com