பீகாரில் 2022-ம் ஆண்டு திடீரென பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைய நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் பீகாரில் கடந்த இரண்டு நாள்களாக முழுவேகத்தில் நடந்து வருகிறது. இன்று காலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் நிதிஷ் குமார் புதிய அரசு அமைக்க எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதம் கொடுத்தனர். நிதிஷ் குமாரின் இந்த திடீர் முடிவு, லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து இரு கட்சிகளும் தனித்தனியாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். நிதிஷ் குமார் இன்று காலை தனது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆட்சி மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்தும் நிதிஷ் குமார் விலகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் விருந்து கொடுக்கிறார். விருந்தைத் தொடர்ந்து இரு கட்சி தலைவர்களும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகின்றனர்.
மாலை 4 மணிக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்கவிருக்கிறது. பதவியேற்பு விழாவில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா கலந்துகொள்ளவிருக்கிறார். புதிதாக முதல்வராக பதவியேற்க இருக்கும் நிதிஷ் குமாருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தப் பதவியேற்புக்கு பதில் அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்யலாம் என்று பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், புதிய அரசு பதவியேற்கலாம் என நிதிஷ் குமார் தெரிவித்துவிட்டார். இரு கட்சிகளும் ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜ.க மேலிடம்தான் முடிவெடுத்துள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com