பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் பதவி மட்டும் அப்படியே இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தற்போது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக நிதீஷ் குமார் இருந்து வருகிறார். அவரை எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தங்களின் மாநிலங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தற்போது நிதீஷ் குமாரும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பீகார் அரசியலில் மாற்றங்கள் வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து நிதீஷ் குமாரும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர கொள்கை ரீதியில் சம்மதித்து இருக்கிறார் என்கிறார்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமான சிலர்.
பீகாரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிதீஷ் குமார், `வாரிசு அரசியல்’ பற்றி கடுமையாக விமர்சித்து பேசி கூட்டணியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவை சீண்டினார். இதனால் சிங்கப்பூரில் இருக்கும் லாலு பிரசாத் மகள் சமூக வலைத்தளத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டுவிட்டு பின்னர் விமசனங்களால் அதனை அகற்றினார். வாரிசு அரசியல் மற்றும் அதனை தொடர்ந்து வந்த சோஷியல் மீடியா பதிவுகளால் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிதீஷ் குமாரை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியதாக சொல்லப்படுகிறது.
பீகார் பா.ஜ.க தலைவர்கள் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் பா.ஜ.க. மேலிடம் மாநில தலைவர்கள் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தடை விதித்து இருக்கிறது. இதனால் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. பேச ஆரம்பித்து இருக்கிறது. அதோடு மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரியை கட்சி தலைமை டெல்லிக்கு வரும் படி அழைத்து இருக்கிறது. அவரும் துணை முதல்வர் சுசில் மோடியும் டெல்லி சென்று கட்சி தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருக்கிறார்கள் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளன.
அதோடு மாநில ஆளுநர் கோவா செல்வதாக இருந்தார். ஆனால் அவரது பயணத்தை ரத்து செய்துவிட்டு பாட்னாவிலே இருக்கிறார். எனவே பீகாரில் எந்நேரமும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஐக்கிய ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்கலாம் என்கிறார்கள். நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியபோது, ”நிதீஷ் குமாரை பிரதம வேட்பாளராக நியமிக்க சரத் பவார், சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் ராகுல் காந்திதான் இவ்விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் கருத்தை கேட்ட பிறகு முடிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். உடனே நிதீஷ் குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன் வெளிப்பாடுதான் அவர் அணி மாறுகிறார்” என்றார்.
பா.ஜ.க.வும் மக்களவை தேர்தலில் நிதீஷ் குமாரின் கூட்டணி தேவை என்று நினைக்கிறது. எனவேதான் எத்தனை முறை கூட்டணியை விட்டு சென்றாலும் அவரை மீண்டும் கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க.ஆர்வம் காட்டி வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் நிதீஷ் குமாரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். கடந்த 2005-வது ஆண்டில் இருந்து நிதீஷ் குமார் ஐந்து முறை அணி மாறி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com