`செல்வாக்கு சரிந்தாலும் பாஜகவுக்கு நிதிஷ் குமார் ஏன்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் ஜே. டி. யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் முக்கியமானவர். மேலும், நிதிஷ் குமார் எதிர்கட்சியின் கூட்டணியில் முக்கிய முகங்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,“நிதிஷ் குமார் தான் இந்தியா கூட்டணியை கூட்டினார். அவர் கடைசி வரை பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடுவார் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன” என நிதிஷ் குமார் குறித்து முன்னர் தெரிவித்திருந்தார்.

INDIA கூட்டணி கூட்டம்

இந்த நிலையில்தான், INDIA கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. அதில் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகப் பீகார் முதல்வரும், ஜே.டி.யு கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் முன்மொழியப்பட வேண்டும் என அவரின் கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்ததும் பேசுபொருளானது.

அதே நேரம் சீட் பகிர்வு விவகாரத்தில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – காங்கிரஸ், பஞ்சாபில் ஆம்ஆத்மி – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் போக்கு நீடிக்கிறது. அதனால், பா.ஜ.க-வை தனித்தே எதிர்த்துப் போராடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது.

நிதிஷ்குமார் – மோடி

அதிலிருந்து நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து பீகார் அரசியல், இந்திய அளவில் கவனத்துக்குள்ளானது. இந்த நிலையில்தான், நேற்று, பீகார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,“இன்று என்னுடைய முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் கூறிருக்கிறேன். எதுவுமே சரியில்லாததால்தான் இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா கூட்டணியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், எந்தவொரு விஷயங்களும் செயல்படவில்லை. இப்போது புதிய கூட்டணியை உருவாக்குவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மம்தா, ராகுல் காந்தி, கெஜ்ரிவால்

INDIA கூட்டணி உறுதியற்ற கூட்டணி என்ற பா.ஜ.க-வின் வாதத்தை INDIA கூட்டணியின் தொடர் சரிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி 79, பா.ஜ.க 78, நிதிஷ் குமார் தலைமையிலான ஜே. டி. யு- 45, காங்கிரஸ் 19, CPI (M-L) 12, CPI(M), CPI தலா 2, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4, AIMIM 2, ஒரு சுயேச்சை வேட்பாளார் என்ற அடிப்படையில், உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஆர்.ஜே.டி – ஜே. டி. யு கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், தற்போது அதைக் கலைத்து விட்டு, ஜே. டி. யு – பா.ஜ.க கூட்டணியில் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் முடிவெடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் நிதிஷ்குமார், இதுபோல பலமுறை கூட்டணி மாறி மாறி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது ஆரம்ப காலத்தில், அவரது கட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்காக `சுஷாஷன் பாபு’ (வளர்ச்சி நாயகன்) என அழைக்கப்பட்டவர், தற்போதைய இத்தகைய அரசியல் தொடர் செயல்படுக்களால் ‘பல்து குமார்’ – (கட்சி மாறிக் கொண்டே இருப்பவர்) என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்.

அமித் ஷா

‘ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க-வின் கதவுகள் மூடப்பட்டுவிட்டது’ என ஓராண்டுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். தற்போது, அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது பாஜக. அதற்கு காரணம், தேர்தல் கணக்கு என கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, 40 லோக்சபா இடங்களைக் கொண்ட பீகாரும், மேற்கு வங்கமும், INDIA கூட்டணியின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

ஆனால், மேற்கு வங்கத்திலும், பஞ்சாபிலும் INDIA கூட்டணியின் உறவு சிக்கலில் உள்ள நிலையில், பீகாரிலும் ஆர்.ஜே.டி – ஜே. டி. யு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது INDIA கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே மத்திய தலைமை இந்த நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டியிருக்கலாம். கடந்த 10 வருடத்தில், நிதிஷ் குமார் 5 முறை கூட்டணி மாறியிருக்கிறார். இதனால், அவரது வாக்கு சதவிகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2010 பீகார் தேர்தலில் 115 இடங்கள் பெற்ற ஜே. டி. யு , 2015-ல் 71 இடங்கலும், 2020-ல் வெறும் 43 இடங்கள் என இறங்கு முகத்தில் செல்கிறது.

நிதிஷ் குமார்

எனவே, தற்போதைய சூழலில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டாலும், பீகார் அரசின் முடிவுகளில் ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வின் குரல் இனி ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், மகாராஷ்டிராவில், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, என இரண்டாக உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், சரத் பவாரின் பலம் வாய்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், இரண்டாக உடைத்து 40 எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க கூட்டணி அரசில் இணைந்தார்.

அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியது பா.ஜ.க. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களின் ஒரு பிரிவினர் விலைக்கு வாங்கப்பட்டதாக பா.ஜ.க மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றசாட்டு பீகாரில் எழாமலே, இந்த முறை பீகாரில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க. இம்முறை நிதிஷ் குமார் மீதே விமர்சனம் வைக்கப்படுகிறது.

இன்னும் தேர்தல் வருவதற்கு அரசியல் களம் எத்தனை மாற்றங்களை சந்திக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும்!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *