மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு 75.6 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 77.2 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மக்கள் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலிருந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
முங்காவாலி சட்டமன்றத் தொகுதியிலுள்ள நயகெடா கிராமத்தில் தண்ணீருக்காக அரசு சார்பில் நான்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த கிராம மக்கள் அவற்றிலிருந்துதான் தங்கள் தேவைக்கு, தண்ணீரை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில், தற்போது பெண்கள் தண்ணீர் பிடிக்கச் சென்றால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் சிலர், “நீங்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களித்தீர்கள் என்பதற்கான உத்தரவாதத்தை அளித்தால்தான், உங்களுக்குத் தண்ணீர் கொடுப்போம். இல்லையென்றால், தேர்தல் முடிவுகள் வரும்வரை தண்ணீர் கிடையாது” எனக் கூறியிருக்கின்றனர்.
இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மத்தியப் பிரதேச அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவிடம் கேட்டபோது, “அந்த கிராமத்தில் அரசு சார்பில் நான்கு ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் தண்ணீர் வழங்குவதற்காகவே, அவற்றை அமைத்திருக்கிறோம். ஆனால், தேர்தலுக்குப் பிறகும் ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்” எனப் பதிலளித்திருக்கிறார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் என்பவர், “நாங்கள் தண்ணீர் பிடிக்கச் சென்றால், `நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தீர்களா… இல்லையா’ என்று கேட்கிறார்கள். நாங்கள் இல்லை என்று சொன்னால், மோட்டாரை அணைத்துவிட்டு எங்களை விரட்டுகிறார்கள்” எனத் தெரிவித்தார். மற்றொரு பெண், “தேர்தல் வரை மட்டுமே அவர்கள் தண்ணீர் போரைச் சரியான நேரத்தில் இயக்கினார்கள்.
அதற்குப் பிறகு, அவர்கள் போரை இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். சிலருக்காக மட்டும் இரவில் இயக்குகிறார்கள். ஆனால், அது எப்போது என்று எங்களுக்குத் தெரியாது. தாமரைப் பூவுக்கு வாக்களிக்காவிட்டால் தண்ணீர் தரமாட்டோம் என மிரட்டுகிறார்கள்” என வேதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா,“பா.ஜ.க-வின் இரட்டை இயந்திரத்தின் போலியான உறுதிமொழிகள், பொய்களின் சத்தத்தில் மறைந்திருக்கின்றன.
பா.ஜ.க-வின் கொடுமையின் உச்சத்தைப் பாருங்கள். தங்களுக்கு வாக்களிக்காதவர்களைத் தண்ணீர் கொடுக்காமல் கொன்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். ஊழலுக்கும், தவறான நிர்வாகத்துக்கும், அட்டூழியங்களுக்கும் மத்தியப் பிரதேச மக்கள் பதிலளித்திருப்பார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com