கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக மாற்றினார். கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றி விட்டனர். அந்தம்மா (சசிகலா) உங்களுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்.

11 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் இருந்த நான், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால், ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிறில் இருந்தார். அதனால் ஆட்சி போனது. அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது. ‘ஈரோடு இடைதேர்தலில் தனியாக நின்றால் ஓட்டு பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாபஸ் வாங்கினோம். ஆனால் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க தோற்றது. இந்த தேர்தல்களில் தோற்று போனதால், மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்.
தொண்டர்களுக்காக வாதாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். அங்கு குண்டர்கள்தான் இருக்கின்றனர். தனிக்கட்சி தொடங்கும் நோக்கமில்லை். கோரப்பிடியிலிருந்து அ.தி.மு.க-வைக் கைப்பற்றி, மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைப்பது நன்றியாக இருக்கும். நிதி சுமையால் ஜெயலலிதா ரூ.2 கோடி கட்சிப் பணத்தைக் கேட்டார். ஒரே மாதத்ததில் அதை அவர் திருப்பிக் கொடுத்தார். இதுதான் வரலாறு, இன்றைக்கு 228 பேரை வைத்து கட்சியை அபகரிக்க நினைக்கிறார்கள்.

எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்தார்கள். நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன… இன்னமும் கட்சித் தொண்டர்களின் உரிமைக்காகப் பாடுகிறேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்” என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஜனவரி 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகத்தான் கொடுக்கப்பட்டது. என்மீது என்ன குற்றம் சொல்கின்றனர்.

யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை சொல்ல முடியுமா… இப்போதும் அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருக்கிறேன். ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியவேண்டும். இதை காதில் வாங்க மாட்டேன் என்கின்றனர்.
மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானத்தை பெற வேண்டும் என சொல்கிறேன். அதை கேட்க மாட்டேன் என்கின்றனர். நாங்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாகச் சொல்பவன் முட்டாள். அ.தி.மு.க நிர்வாகிகள்மீது எத்தனை வழக்குகள் இருக்கின்றன. கொடநாடு கொலை கொள்ளை உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து செயல்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்து. கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமி மேலே வரவே முடியாது” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com