கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான அ.தி.மு.க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டபோது, கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர் ஒருவர்தான், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இதை எந்த பொதுக்குழுக் கூட்டத்தாலும் மாற்றம் செய்திட முடியாது. காரணம், அ.தி.மு.க என்னும் கட்சியில் சாதாரண தொண்டன், கட்சியின் மிகப்பெரிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற வரலாற்று சிறப்புமிக்க விதியை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்துச் சென்றார். அதனடிப்படையில்தான், புரட்சித் தலைவி அம்மா, பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகுத்து ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திச் சென்றார்கள். அதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கான விதியை மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்ற சரத்து, அ.தி.மு.க கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தானாக பொதுச்செயலாளராக இன்று மகுடம் சூட்டிக்கொண்டு, அ.தி.மு.க-வின் முக்கிய விதியை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்.

இது, அ.தி.மு.க தொண்டர்களுக்கான உரிமையை மீறும் செயல். இந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக, தற்போது எனது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான், அ.தி.மு.க எனும் கட்சியின் `தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’. அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டன் மட்டும்தான் பொதுச்செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற விதியை எடப்பாடி பழனிசாமி திருத்தி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் நிர்வாகியாக பணியாற்றி உள்ள ஒரு நபரை, மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி விதியைத் திருத்தி… பொதுச்செயலாளர் பதவியை அபகரித்துள்ளார். சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளர் பதவியை அடைய முடியும் என்ற விதியின் அடிப்படையில்தான், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரும் தலைமை பொறுப்புக்கு வந்தோம்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றரைக் கோடி தொண்டர்கள் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியைத் தூக்கி எறிவார்கள். புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்குப் பிறகு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, கௌரவப்படுத்தப்பட்டது. ஏனென்றால், 30 ஆண்டுகள் தொடர்ந்து அ.தி.மு.க எனும் கட்சியை வழிநடத்தி அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மாதான். அதற்காகத்தான், இந்த உச்சபட்ச மரியாதையை வழங்கும் வகையில், நிரந்தர பொதுச்செயலாளர் எனும் பதவியை ஒருமனதாகத் தேர்வு செய்து வழங்கினோம். அதனடிப்படையில்தான், அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றரைக் கோடி தொண்டர்கள் ஒருமனதாக வாக்களித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டுத் தலைமை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இரண்டே வாரங்களில், அ.தி.மு.க ஒற்றை தலைமை அடிப்படையில் இயங்க வேண்டிய அவசியம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறி, சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள் என்று கூறி, அ.தி.மு.க-வின் சட்டத்திட்ட விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். இது தொடர்பாக, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக பா.ஜ.க மூத்த தலைவர்கள் என்னையும், எடப்பாடியையும் அழைத்துப் பேசினார்கள். அப்போது, `டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வாக்குகளைப் பிரித்ததால், அ.தி.மு.க வாக்கு வங்கி சரிந்துள்ளது. மறுபுறம் நாங்கள், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை வைத்துள்ளோம். எனவே அனைவரையும் ஒன்றிணைத்து அ.தி.மு.க வலுவான இயக்கமாக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்’ என அமித் ஷா கூறியபோது, எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அ.தி.மு.க இரு அணிகளாகப் போட்டியிடுவதால், தி.மு.க வெற்றி பெற்றுவிடும்’ எனக் கூறி, இருவரையும் வாபஸ் பெறக் கூறினார். எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர், `அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைத்துக் கொள்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, `ஒரு சதவிகிதம்கூட அதற்கு வாய்ப்பில்லை’ என எடப்பாடி கூறினார். தனித்தனியாக இயங்கும் தினகரன், சசிகலா, நான் ஆகியோர் அ.தி.மு.க-வில் இணைந்தால் கூட்டுத் தலைமை உருவாகிவிடும், தனது பொதுச்செயலாளர் பதவி பறிபோய்விடும் என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்.

அ.தி.மு.க-வை மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அ.தி.மு.க என்னும் கட்சியை வலுப்பெற செய்யாமல் தி.மு.க-வுடன் கைகோத்து செயல்படுவது எடப்பாடி பழனிசாமிதான். தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அ.தி.மு.க வலுப்பெற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், எடப்பாடி அ.தி.மு.க எனும் கட்சியை அழிக்க, அ.தி.மு.க கட்சியை பல துண்டுகளாக உடைத்து, ஒற்றைத் தலைமை என்னும் பதவி ஆசையில் கட்சியை அழிக்கப் பார்க்கிறார். பதவி வெறி பிடித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-விலிருந்து உண்மையான அ.தி.மு.க தொண்டர்களால் தூக்கி எறியப்படும் காலம் மிக விரைவில் வரும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com