கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கின்ற ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (68) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் திருமணம் ஆகாதவர் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, உறவினர்களை விட்டு இவர் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
மேலும், அந்த முதியவர் பெரும்பாவூர் பேருந்து நிலையத்தில் தான் தங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது. அதோடு, எப்போதாவது, அவருடைய உறவினர்களின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஒரு சில திருட்டு வழக்குகள் இவர் மீது இருக்கிறது. அதனால், இவர் கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் தான், கடந்த 14ஆம் தேதி அங்கமாலி என்ற பகுதியில் ஒதுக்கு புறமான இடத்தில், ஒரு வயதானவரின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், இந்த விபரங்கள் அனைத்தும் தெரிய வந்தது. ஆண்டனியின் உறவினர்களுக்கும் இது பற்றி தெரிய வந்ததால், எர்ணாகுளம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உடலை கண்ட ஆண்டனியின் உறவினர்கள், சில அடையாளங்களை சொல்லி, இறந்து போனது ஆண்டனி தான் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் காவல் துறையினர், ஆண்டனியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அதன் பிறகு உடல், ஆழ்வார் செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி 7வது நாள் பிரார்த்தனை கூட்டமும் நடந்தது. ஆனால், கடந்த 24ஆம் தேதி வரையில் இறந்து போனது ஆண்டனி தான் என்று அவருடைய உறவினர்கள் நினைத்திருந்த நிலையில், தற்செயலாக ஆண்டனி கடந்த 24ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளார். அவரைப் பார்த்த ஊர் மக்களும் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனை தொடர்ந்து, நடந்தது அனைத்தையும் உறவினர்கள் ஆண்டனியிடம் கூற, அதிர்ச்சியில் உறைந்தார் ஆண்டனி. இது தொடர்பாக அங்கமாலி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டபோது, உயிரிழந்தவர் ஆண்டனி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அடக்கம் செய்த உடல் யாருடையது? என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து, காவல்துறை தரப்பில், இது எங்களுடைய தவறல்ல, குடும்பத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடலை அடையாளம் காட்டிய பிறகு தான், உடலை அவர்களிடம் ஒப்படைத்தோம் என்று தெரிவிக்கப்பட்டது. டி.என்.ஏ விவரக் குறிப்பை பயன்படுத்த காவல் துறை முடிவு செய்திருக்கிறது. மேலும், உயிரிழந்தவரை அடையாளம் காண மாநில குற்றப்பதிவு பணியகத்தை நாங்கள் அணுகி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
அத்துடன், உயிரிழந்த நபரின் சட்டை பையில் இருந்து, ஒரு சிறிய கடிதத்தை நாங்கள் மீட்டோம். அதில், ஜனார்த்தனன் என்று எழுதப்பட்டிருந்தது. அது அவருடைய பெயராக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஜனார்த்தனன் என்ற பெயரில், காணாமல் போன வழக்குகளை நாங்கள் கண்டறிய எஸ்.சி.ஆர்.பியை அணுகி இருக்கின்றோம் என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதற்கு நடுவே, இறந்துவிட்டார் என்று நம்பப்பட்ட ஒரு நபர், உயிருடன், மீண்டும் வந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: 1newsnation.com