புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியில் பா.ஜ.க மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம்–முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவர் காந்திமதி தம்பதியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மணமக்கள் வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஆசை. 1947-க்குப் பிறகு 1952, 1957, 1962, 1967 என சுமார் 20 ஆண்டுகள் நாட்டில் ஒரே தேர்தல்தான் நடந்தது. தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியின்போது 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசை காங்கிரஸ் கலைத்தது. அதன் விளைவாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடப்பட்டது.

அதனைத்தான் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார். 2023-ல் மட்டும் ஒரே ஆண்டில் 7 சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கடுத்தாண்டு உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தல் நடைபெறும்.
அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் அரசுப் பணியாளர்கள் தேர்தல் வேலையை மட்டுமே செய்திருக்கின்றனர். தேர்தல் நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே கலெக்டர் முதல் அங்கன்வாடி பணியாளர்கள் வரை சரிபார்ப்பு பணிகளுக்காக கிளம்பிவிடுகின்றனர். தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அப்படியிருக்க, எப்படி அரசு அதிகாரிகள், மக்கள் பணி செய்வார்கள். எனவேதான், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அரசு அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.
ஆறு மாதங்கள் தேர்தல் வேலையை செய்துவிட்டு ஐந்து ஆண்டுகள் வரையிலும் அவர்களால் மக்கள் பணியை முறையாக செய்ய முடியும். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் நான்கு வருடங்கள் கொள்ளை அடிக்கின்றனர். கொள்ளை அடித்த பணத்தை தேர்தலின்போது மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால், ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள், நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். இது மாற வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்போது இரு போன்ற பிரச்னைகள் இருக்காது. குறிப்பாக மாற்றி, மாற்றி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. தேசியக் கொள்கையின் அடிப்படையில் தேர்தல் நடக்கும். மக்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க வேண்டும். நம் நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்றால் தேர்தல் நாடாகவே இருக்க கூடாது.

இந்தக் கோரிக்கையை 1983-ல் தேர்தல் ஆணையமும், 1999-ம் ஆண்டு சட்ட ஆணையமுமே கேட்டன. இது ஒன்றும் புதிதில்லை. அதேபோல், எம்.பி தொகுதி பறிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என்று மீண்டும் தனியாக நாடாளுமன்றத் தொகுதி வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அவர்களும் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். ஒரே எம்.பி தொகுதியாக இருந்தால்தான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். எனவேதான் புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுப்பதற்கு பா.ஜ.க தொடர்ந்து போராடும்” என்றார்.
பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பா.ஜ.க கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன், மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com