காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சாமஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சி.பி.எம், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்கள் மற்றும் பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் ஆகியோர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. சீதாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், பவன் கேரா, சசி தரூர், மஹுவா மொய்த்ரா, அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, பிரியங்கா சதுர்வேதி, ராகவ் சத்தா, ஒவைசி, சித்தார்த் வரதராஜன் (பத்திரிகையாளர் – தி வயர்), ஸ்ரீராம் கர்ரி (பத்திரிகையாளர் – டெக்கான் குரோனிக்கிள்) எனப் பலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக, மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, பவன் கேரா ஆகியோர், தங்களின் ஐபோன்களை ஹேக் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாக ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து வந்த அலர்ட் மெசேஜை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு, பா.ஜ.க அரசையும் மோடியையும் சாடிவருகின்றனர்.
ஐபோன் தரப்பிலிருந்து, `அரசு ஆதரவளிக்கும் ஹேக்கர்களால் உங்களுடைய ஐபோன் குறிவைக்கப்படலாம்’ என்ற தலைப்பில் அவர்களுக்கு வந்த அலெர்ட் மெசேஜில், `அரசு ஆதரவளிக்கும் ஹேக்கர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு, ஆப்பிள் ஐ.டி மூலம் மூலம் இயங்கும் உங்கள் ஐபோனை அவர்கள் வேறு இடத்திலிருந்து இயக்க முயல்வதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை அவர்கள் தனித்தனியாக குறிவைக்கிறார்கள். ஒருவேளை உங்களின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டால், உங்களின் ஐபோனிலுள்ள முக்கியமான தரவுகள், தகவல்கள், கேமரா, மைக் போன்றவற்றை அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இது தவறான எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம், இருந்தாலும் இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடியை அதானியுடன் இணைத்துச் சாடியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மோடியின் ஆன்மா அதானிதான். மோடியை நாம் எவ்வளவு தாக்கினாலும், அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஏனெனில், அவரின் ஆன்மா வேறு எங்கோ இருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட நாங்கள், அந்த ஆன்மாவைத் இப்போது தாக்குகிறோம். அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த மெசேஜை அனுப்பியதும் இதனால்தான்.
அதிகாரம் மோடியிடமும், அமித் ஷாவிடமும் இருக்கிறது என்பது கட்டுக்கதை. நம்பர் 1 அதானி, நம்பர் 2 மோடி அதன் பிறகு நம்பர் 3 அமித் ஷா. அதானியால்தான் பிரதமர் பணியமர்த்தப்படுகிறார் என்பதையும், அவருக்காகத்தான் பிரதமர் வேலை செய்கிறார் என்பதையும் இந்த நாடு கூடிய சீக்கிரம் உணரும். அதற்கு உதாரணம், மும்பை விமான நிலையம் வேறொருவருக்குச் சொந்தமாக இருந்தது. பின்னர் அரசு ஏஜென்சிகள் அந்த உரிமையாளரைத் தாக்கியதும், விமான நிலையத்தை அவர் அதானியிடம் ஒப்படைத்தார்.
அதேபோல், அதானி ஆஸ்திரேலியாவிலிருந்து அதிக விலைக்கு நிலக்கரி வாங்கிறார். ஆனால், அமலாக்கத்துறை, சி.பி.ஐ என எந்த விசாரணையுமே இல்லை. அதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பது… இந்த நாட்டு மக்களும், நாமும் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது அதானிக்கு வரி செலுத்துகிறோம். ரயிலில் செல்லும்போது அதானிக்கு வரி செலுத்துகிறோம். எனவே, என்ன இந்த நாட்டில் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அடிப்படையில் இந்த நாட்டிலுள்ள அனைத்தையுமே அதானி கையகப்படுத்துகிறார். பெரும்பாலான சேனல்களை அவர் வைத்திருக்கிறார். தற்போது இந்த செயல் அச்சத்தின் அறிகுறிதான்.
இது குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை. வெகு சிலரே இதை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனாலும், நாங்கள் பயப்படவில்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஹேக் செய்யுங்கள், எனக்கு கவலையில்லை. என்னுடைய செல்போனைக்கூட தருகிறேன். இதுவொரு முக்கியமான பிரச்னை. எனக்கு சில யோசனைகளும் இருக்கின்றன. அதானி அரசை எப்படி அகற்ற முடியும் என்பதை நேரம் வரும்போது காட்டுவோம். அரசை அகற்றுவதன் மூலம் அதானியும் அகற்றப்படுவார் என்று நினைக்க வேண்டாம். நாட்டில் தற்போது நடந்து வரும் ஏகபோகத்தின் அடையாளமே அதானிதான். பா.ஜ.க-வின் நிதி அமைப்பு அதானியுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக எழுந்த இந்த விவகாரத்தில், விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com