அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தனித்து செயல்படும் ஓ.பன்னிர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவையை பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்றம் மூலமாக நெருக்கடி கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், ‘தொண்டர்கள் மீட்புக் குழு’ என்று மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பன்னீர். முன்னதாக, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கும் நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார் பன்னீர். தனியாக சந்தித்து பேச வாய்ப்பு கொடுக்கப்படாததால், கடிதம் ஒன்றை பிரதமரிடம் வழங்கி இருக்கிறார் பன்னீர்.
இது அரசியல் ரீதியாக கவனம் பெற்று வரும் நிலையில், தொண்டர்கள் மீட்புக் குழுவின் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் ஜனவரி 3-ம் தேதி நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர், “சிறுபானமையினர் பாஜக-வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தவறு. உ.பி-யில் உள்ள 38 சதவிகித சிறுபான்மையினர் பா.ஜ.க-வுக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார்” என்றார். அதேபோல, ‘அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்’ என்றும் கூறி இருந்தார்.
பா.ஜ.க-வுடன் பன்னீர் நெருக்கம் காட்டுவது குறித்து அவரது ஆதரவு வட்டத்தில் பேசினோம். “எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளை கையாள ஓ.பி.எஸ் தயாராகிவிட்டார். அதனால்தான், பகையை மறந்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்து பயணிப்போம் என்பதையும் ஓ.பி.எஸ் தெளிவு படுத்திவிட்டார். தற்போது பா.ஜ.க-வுடனான கூட்டணியை எடப்பாடி முறித்துக் கொண்டதால், பா.ஜ.க-வுக்கும் வலுவான கூட்டணி அவசியம். எனவேதான் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டுகிறார் ஓ.பி.எஸ். அதன்படிதான் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது அவரை சந்தித்து பேசினார் ஓ.பி.எஸ்.
எந்நிலையிலும் டெல்லியின் கையைவிட்டுவிடக் கூடாதென்றுதான் ஓ.பி.எஸ் தெளிவாக இருக்கிறார். ஆனால், டெல்லி அப்படி நினைப்பதாக தெரியவில்லை. எங்கள் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தின் எந்த அங்கிகாரமும் இல்லாத நிலையில், ‘நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்’ என்று ஓ.பி.எஸ் தொடர்ந்து கூறிவருகிறார். கூட்டணி அமைக்க முதலில் கட்சி வேண்டுமே? ஒருவேளை கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் சீட் ஒதுக்கப்பட்டால் எந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
தேர்தல் அரசியலை மனதில் வைத்துதான் தனிக்கட்சி தொடங்க ஆலோசிக்கப்பட்டது. தனிக்கட்சி தொடங்கினால், அ.தி.மு.க-வுக்கு உரிமை கொண்டாட முடியாது என்று மறுத்துவிட்டார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சியே இல்லாமல் யாருடையாவது இணைந்து தேர்தலை சந்தித்தால் எங்கள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒரு சீட்க்கு மேல் பங்கீடு செய்யமாட்டார்கள். அதுவும் அ.ம.மு.க அல்லது பா.ஜ.க-வின் சின்னத்தில்தான் போட்டியிட முடியும். அப்போதும் அ.தி.மு.க-வுக்கு உரிமை கொண்டாட முடியாது. இதை ஓ.பி.எஸ் புரிந்துக் கொள்ளவே இல்லை.
தற்போது பிரதமருடனான சந்திப்பில்கூட ஓ.பி.எஸ்-க்கு தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து டெல்லியிடம் கேட்டபோது, ‘அரசு நிகழ்ச்சிக்காக பிரதமர் வந்திருக்கும் இடத்தில் அரசியல் சந்திப்புகள் வேண்டாம் என பிரதமர் நினைக்கிறார். அதேபோல, தொடர் நிகழ்ச்சிகள் இருப்பதால் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், எடப்பாடியை கூட்டணிக்குள் எப்படியும் கொண்டு வந்துவிடலாம் என்று டெல்லி நினைப்பதால்தான் ஓ.பி.எஸ்-ஸுடனான தனிமை சந்திப்பை தவிர்த்து இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுந்து இருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று ஓ.பி.எஸ் உறுதியாக நம்புகிறார். இப்படி எங்களுக்காகவே ஆயிரெத்தெட்டு குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால், நம்முடைய ஓவ்வொரு மூவ்வும் எடப்பாடிக்குதான் சிக்கல் என்று பேசுகிறார் ஓ.பி.எஸ்.
பிரதமருடனான சந்திப்பை எடப்பாடி தவிர்த்ததுபோல, டெல்லியின் என்.டி.ஏ கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் தவிர்த்துவிட்டனர். இதன்மூலம், அவர்கள் கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதால், எடப்பாடி இதை பெரிதாகவே எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ்-தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்கிறாரே தவிர, பா.ஜ.க இதுவரை ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. எடப்பாடியை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர ஓ.பி.எஸ்-ஸை ‘கீ’யாக டெல்லி பயன்படுத்துகிறது. இதன்மூலம் எங்கள் தரப்புக்குதான் பின்னடைவு.” என்றனர் விரக்தியுடன் விரிவாக.
ஆளாளுக்கு ஒரு கணக்கு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. யாருடைய கணக்கு வெல்லும் என்பது போக போக தெரியும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com