ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாலியாகக் கலந்துரையாடியிருக்கிறார். அஸ்ஸாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க் (Pratidin Media Network) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொண்டார்.
இதில், ராகுலிடம் அரசியலைத் தவிர்த்து திரைப்படங்கள், விளையாட்டு, வாழ்க்கை முறை குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, `நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ஜிம்முக்குச் செல்வீர்களா?’ என்று ராகுலிடம் கேட்கப்பட்டதற்கு, `ஜிம்முக்குச் செல்வேன்!’ என்று ராகுல் கூறினார்.
அடுத்ததாக அவரின் தாடி குறித்த கேள்விக்கு, “இதுதான் காங்கிரஸுக்கும் என்னிடமிருக்கும் பிரச்னை. தாடி இருக்கிறதா, இல்லையா, உணவு, உடை போன்றவை இருக்கிறதா, இல்லையா என்பதில் எல்லாம் பெரிதாக எனக்கு அதிக அக்கறை இல்லை. எதுவாக இருந்தாலும் அப்படியே இருந்துவிடுவேன்” என்று ராகுல் கூறினார். அதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்களான தி காட்பாதர், தி டார்க் நைட் ஆகிய இரண்டில் எது பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல், இரண்டுமே மிக ஆழமான படங்கள் என்று இரண்டு படங்களையும் தேர்ந்தெடுத்தார்.
அடுத்தது முக்கியமாக, “நீங்கள் அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருப்பீர்கள்” என்று ராகுல் காந்தியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, “எதுவாகவும் இருப்பேன். ஏனெனில், என்னை நான் ஒரு அரசியல்வாதியின் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்கவில்லை. என் சகோதரியின் பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் இருக்கையில் ஆசிரியாராக இருக்கிறேன். சமையலறையில் இருக்கும்போது ஒரு சமையல்காரராக இருக்கிறேன். நாம் அனைவருமே பலவிதமான ஃபிரேம்களைக் (Frames) கொண்டிருக்கிறோம்” என்றார்.
அடுத்து கிரிக்கெட்டா, கால்பந்தா என்று கேட்டபோது, “கிரிக்கெட்டை விடவும் கால்பந்து மிகவும் பிடிக்கும்” என்று ராகுல் காந்தி கூற, உடனடியாக ரொனால்டோவா… மெஸ்ஸியா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “ரொனால்டோவைப் பிடிக்கும். மெஸ்ஸி ஒரு சிறந்த கால்பந்து வீரர், ஆனால் ரொனால்டோவின் கருணை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ராகுல் கூறினார். இறுதியாக, இந்தியா, பாரத் இரண்டில் ஒன்று தேர்வு செய்யுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இந்தியா, அதுவே பாரத்” என்று கூறினார் ராகுல்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய பிரச்னைகள் என, “செல்வத்தில் மிகப்பெரிய சமத்துவமின்மை, மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை, பட்டியலின, ஓ.பி.சி, பழங்குடி சமூகங்களுக்கு எதிரான அநீதி, விலைவாசி உயர்வு” ஆகியவற்றை ராகுல் குறிப்பிட்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com