பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1999-ம் ஆண்டு பிறந்தவர் எரிகா ராபின். இவர் தன் ஆரம்ப கல்வியை செயின்ட் பேட்ரிக் பெண்கள் உயர்நிலை பள்ளியிலும் தொடர்ந்து சண்டிகரில் உள்ள அரசு வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகக் கல்லூரியில் மேற்படிப்பையும் முடித்துள்ளார். இவர் 2020-ல் தனது தொழில்முறை மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார். எரிகா, கடந்த மாதம் ‘கராச்சி மிஸ் யுனிவர்ஸ் பாகிஸ்தான்’ பட்டத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் எல் சால்வடாரில் நடக்கவிருக்கும் சர்வதேச பிரபஞ்ச அழகிப் போட்டியில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருகிறார் எரிகா. ஆனால் இவருக்கு பாகிஸ்தானில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் செனட்டர் முஷ்டாக் அகமது ‘இது வெட்கக்கேடானது’ என கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வர் உல்-ஹக் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார், மேலும் பாகிஸ்தானில் உள்ள ஆண்கள் சமூகவலைத்தளம் மூலம் எரிகா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் தன் மீதான எதிர்ப்பு பற்றி பேசியுள்ள எரிகா,” பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தானை பிரதிநித்துவப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதற்கு எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆண்கள் நிறைந்த அறையில் நீச்சல் உடையில் நான் நடந்து செல்வேன் என்று அவர்கள் கருதுவதாக நினைக்கிறேன். உலகளாவிய ஒரு பொது மேடையில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நான் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. இது போன்ற முயற்சிகளை எதிர்ப்பவர்களை அடக்கும் முயற்சியில் நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என பகிர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதை விமர்சிப்பவர்கள், அவர் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பாத ஒரு நாட்டின் பெயரில் பங்கேற்பதாகக் கூறுகிறார்கள். இருந்தும் பல மாடல்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எரிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் ஒரு பெரிய சர்வாதிகார அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதுடன், அது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடைமுறைப்படுத்தும் கடுமையான ஆணாதிக்க விழுமியங்களில் பிரதிபலிக்கிறது. எரிகா ராபினிடம் காவல் துறை மேற்கொண்ட விசாரணை என்பது அந்த ஆணாதிக்கத்தின் தொடர்ச்சி தான்” என்று கூறியுள்ளார் கராச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ரஃபே மெஹ்மூத்.
நன்றி
Publisher: www.vikatan.com