இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024-ல்) நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மத்தியில் பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு சர்வாதிகார ஆட்சிக்குள் சென்றுவிடும். பாஜகவினர் பிரச்சாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்து விட்டனர். இதனால் வேறு எந்த கட்சியும் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பாஜகவினர் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலோ நடத்தலாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
மேலும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கோஷமிட்ட ஏ.பி.வி.பி. மற்றும் பாஜக தொண்டர்களை கைது செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன். இது வங்காளம், உத்தரபிரதேசம் அல்ல. இதை கோஷமிடுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், பர்கானாக்கள் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரத்தில், சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சில போலீசாரும் ஆதரவாக உள்ளனர். நேர்மையான போலீஸ்காரர்கள் நிறைய பேர் இருந்தாலும் சிலர்இது போல சமூக விரோதிகளுக்கு உதவுகின்றனர். மாநிலத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? லாபம் சற்று குறையலாம், ஆனால் அது மிகுந்த பாதுகாப்பும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் ஆகும் என்று கூறினார்.
நன்றி
Publisher: 1newsnation.com