வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க:
அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், கண்டிப்பாக கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.கவுடன் சேர வாய்ப்பிருக்கிறது!” என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
தவிர, அதற்கான சில சிம்டம்ஸ்களும் தி.மு.க கூட்டணி கட்சிகளிடம் தென்படுகின்றன. பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியதை வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று பேசினார். “பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கது. அ.தி.மு.க தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதேவேளையில் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க இணைந்து பயணித்தால் அதன் வாக்குவங்கி குறைந்துவிடும்!” என அ.தி.மு.க மீதான கரிசனத்தைக் கொட்டினார். அதேபோல, சமீபத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனை, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! இதுவும் தி.மு.கவினரை யோசிக்க வைக்கிறது.
இனி சிறுபான்மையினர் ஓட்டும் எங்களுக்கே!
கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேசிய கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது, நாம் உடன்படாத விஷயங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். இனிமேல் அந்த நிலை நமக்கு இல்லை. மாநில மக்களின் நலன்தான் அ.தி.மு.க-வுக்கு முக்கியம். சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.கதான். தேர்தல் நேரத்தில் தி.மு.கவினர் மக்களிடம் அழகாக பேசி ஏமாற்றுவதற்கு அனைத்து தந்திரங்களையும் முன்னெடுப்பார்கள்!” என சிறுபான்மையினருக்கு ஆதரவாக அ.தி.மு.க-தான் இருக்கிறது என ஒரே போடாகப் போட்டார்.
அதேநாளில்தான், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பும் நடந்தது. ஏற்கெனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க கூட்டணியில் ஒரு சீட் கேட்டார் தமிமுன் அன்சாரி. அதை தி.மு.க கொடுக்காத நிலையிலும், பா.ஜ.கவை வீழ்த்த தி.மு.கவுக்கு எங்களின் ஆதரவு என்று முழங்கினார். தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே, தமிமுன் அன்சாரியின் பழைய ஸ்நேகிதரான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிப்பதால் கூட்டணியில் இடம்கிடைக்க வாய்ப்பு குறைவுதான். அதேசமயம், ஏற்கெனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுதான் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com