கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியையும், 10-ம் வகுப்பு மாணவனும் முத்தமிட்டுக்கொண்டு நெருக்கமாக போட்டோஷூட் செய்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து வெளியான தகவலின்படி புகைப்படங்களில் இருப்பவர்கள், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் முருகமல்ல கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் எனக் கூறப்படுகிறது.
பள்ளி சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில், ஆசிரியையும், மாணவரும் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்திருப்பதாக் கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்களில், ஆசிரியையும், மாணவரும் முத்தம் கொடுத்துக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களை அமித் சிங் ரஜாவத் என்பவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “ஒரு சமூகமாக நாம் எங்கே செல்கிறோம்… கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் முருகமல்ல அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் 10-ம் வகுப்பு மாணவனுடன் எடுத்த காதல் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர், தொகுதி கல்வி அலுவலரிடம் (BEO) புகாரளித்திருக்கின்றனர்.
ஆசிரியரின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கல்விச் சுற்றுலாவின்போது இந்த போட்டோஷூட் நடந்ததாகக் கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் கீழ் இணையதளவாசிகள் பலரும், தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துவருகிகின்றனர்.
அதில் ஒருவர், “மாணவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெகுளி அல்ல” என்றும், மற்றொரு நபர், “இந்த போட்டோஷூட்டால் ஏன் இவ்வளவு சலசலப்பு. இதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி தண்டிக்கப்படவேண்டுமென்றால் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கமென்ட் செய்திருந்தார். இன்னொருபக்கம், சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரைப் பெற்ற தொகுதிக் கல்வி அலுவலர் வி.உமாதேவி, பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதாகவும், முழுமையாக விசாரிக்கப்படாமல் இப்போதைக்கு எதையும் கூறமுடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com