கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழையைச் சந்தித்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், கன்னியாகுமரி ஏற்கெனவே பலமுறை கண்ட மழையைத்தான் சந்தித்திருக்கிறது. மழை நீர் வடிந்து செல்வதற்கான வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இதற்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் ஏற்கெனவே 4,000 கோடி ரூபாய் செலவு செய்ததாகச் சொன்னார்கள். மழை பெய்து வெள்ளம் வந்த பிறகு, பாதி தொகையைத்தான் செலவு செய்ததாகச் சொன்னார்கள். மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியை முறைப்படி சரியாகச் செலவுசெய்தால், மத்திய அரசு நிதி கொடுக்கத் தயாராக இதுக்கும். எல்லாவற்றையும் மறைக்கும்விதமாகச் செயல்பட்டால், மாநில அரசுக்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் இங்கு வந்து பார்த்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஹெலிகாப்டரிலாவது வந்திருக்க வேண்டும். மாவட்ட, மாநில அதிகாரிகளிடம் ஆலோசித்து உடனடி தீர்வுக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவர் டெல்லி வேலைகளைப் பார்க்கச் சென்றிருக்கலாம். அதைவிடுத்து அவர் டெல்லிக்குச் சென்றிருப்பது ஏற்புடையதாக இல்லை. கடந்தகாலம் என நாம் எதையுமே நியாயப்படுத்தக் கூடாது. நிகழ்காலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிட்டால், இன்று எவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்படும்.

பன்னெடும் காலமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெருவாரியான மழை பெய்துவருகிறது. அதை அவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும். சென்னையில் ஒருவாரம் முன்பே அறிவிப்பு வந்த பிறகும், நடவடிக்கை எடுக்கவில்லை. வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம்சாட்டுபவர்கள், `இன்னும் இதுபோலத்தான் இருப்போம்’ எனச் சொல்கிறார்கள். வானிலை ஆய்வு மையம் ஆய்வுபூர்வமான விஷயங்களைதான் கூற முடியும். அதையும் மீறி சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், அரசாங்கம் ‘நீங்கள் சொன்னால்தான் நாங்கள் செய்வோம். அதுவரை தயாராக இருக்கமாட்டோம்’ என இருக்கலாமா… சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, மற்ற இடங்களில் வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற உணர்வு அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கு இருந்திருக்க வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com