மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்:
எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், சுகாதாரத் துறை மந்திரியின் அலட்சியம் பற்றியும் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், பேட்டிகளின் வாயிலாகவும் நான் தெரிவித்த பின்பும், இன்றும் நோயாளிகள் மருந்துகளுக்காகத் தவிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் (Local Purchase) மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிய வருகிறது. இதனால், மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் வாங்க நாளை வாருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என்று அலைக்கழிப்பதால், ஏழை, எளிய நோயாளிகள் பலமுறை பயணச் செலவு செய்து மருத்துவமனைகளுக்கு வந்தும் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனது தலைமையிலான அதிமுக அரசு, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் என நியமித்து அம்மா மினி கிளினிக்குகளைத் தமிழகமெங்கும் துவக்கியது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாகத் தமிழக மக்களுக்குச் சேவை செய்து வந்த அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டது. இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர ஆணையர், அடிபட்ட தனது உதவியாளர் ராமன் என்பவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், அவரை மேல்சிகிச்சைக்குச் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசர கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்துக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கிச் சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.” என்று குறிப்பிட்டார்.
நேரடியாக விவாதிக்கத் தயாரா பதிலடி கொடுத்த அமைச்சர்!
எதிர்க்கட்சி தலைவர் அறிக்கைத் தொடர்பாகப் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் மூலம் தமிழகத்தில் மருந்துகள் இருப்பு நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் இதனைக் கருத்தில் கொள்ளாமல் இன்றும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முதல்வரின் தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடுகளாகத் தமிழ்நாடு மருத்துவத் துறைக்குக் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளை வாங்கிவருகிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்துக்குக் கிடைத்த மொத்த விருதுகள் 549. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தமிழகத்துக்கு 310 விருதுகள் கிடைத்திருக்கின்றன. இதனை எடப்பாடி பழனிச்சாமி தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், அவர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் தமிழகத்தை எத்தனை முறை சுற்றி வந்திருக்கிறீர்கள். எத்தனை மலைக்கிராமம் இருக்கின்றன, எத்தனை ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர்களோ சென்றிருக்கிறீர்கள். நாங்கள் எத்தனை முறை இதனைச் செய்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு எங்களிடம் விவாதம் நடத்தத் தயாரா.
நீங்களோ உங்கள் கட்சி சார்ந்தவர்களோ இதுகுறித்து சட்டமன்றம் நடக்கும்போது பேசலாம். சட்டமன்றம் நடக்காதபோது எங்கேயோ ஒளிந்துகொண்டு பேசுவது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் 313 அத்தியாவசிய மருந்துகள் வாங்கப்படுகிறது, 234 வகையான மருத்துவ அறுவை மற்றும் தையல் உபகரண சாதனங்கள், 326 சிறப்பு மருந்துகள் மற்றும் 7 ரத்தம் உறைதல் சம்பந்தப்பட்ட மருந்துகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு ஏழை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகளில் 326.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 240.99 கோடி ரூபாய் மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. இதற்கு பிறகும் எடப்பாடி பழனிசாமிக்கு மருந்து தட்டுப்பாடு குறித்து சந்தேகம் இருந்தால் நானும் உடன் வருகிறேன் நேரடியாக ஆய்வுக்குச் செல்வோம். அவருக்கு வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மையா என்பது குறித்து மருத்துவத்துறையில் உள்ள ஒரு உயரதிகாரி சிலரிடம் பேசினோம், `மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதிலும் சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது. இதனால், மற்ற மருத்துவர்கள் அதிகநேரம் பணியாற்றும் சுழலும் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, 1,021 காலி பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருந்தது. தற்போது அதோடு சேர்ந்து கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பும் பணி நடக்கிறது.
மருத்துவர்கள் பணியிடம் குறித்த வழக்குகள் நடைபெற்றிருந்த சுழலில் மேலும் 500 மேற்பட்ட மருத்துவர்கள் காலி பணியிடங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மட்டுமே. அதேநேரத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்பதெல்லாம் உண்மை கிடையாது. சமீபத்தில் சர்க்கரை நோய்க்கான மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனையும் உடனடியாக சரிசெய்துவிட்டார்கள். மருந்து கிடங்கு இல்லாத ஒரு ஆறு மாவட்டத்தில் மட்டும் அருகிலிருக்கும் மாவட்டத்திலிருந்து மருந்தைக் கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது. அதனைச் சரிசெய்யவும் அந்தந்த மாவட்டத்தில் மருந்து கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. அங்கு மருந்து கிடங்கு கட்டிமுடிக்கப்பட்டால் அந்த பிரச்சனையும் தீர்வுகாணப்படும்” என்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாதத்துக்குக் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். ஒவ்வொரு மருத்துவர்கள் பணியும் மிகவும் முக்கியமான ஒன்று. காலிப்பணியிடங்களை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிரப்ப அரசு முன்வரவேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com