அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை என 13 சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தின் செயலாளராக வேளச்சேரி அசோக் தனது மாவட்டத்தில் உள்ள சார்பு அணிகளுக்கான நியமனத்தை சமீபத்தில் மேற்கொண்டார்.

அதன்படி, தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பாசறைக்கு மாவட்ட செயலாளராக என்.கிருஷ்ணராஜ் என்பவரை நியமிக்கப்பட்டார். இந்த நியமனம்தான் தென் சென்னை அ.தி.மு.க-வுக்குள் சர்ச்சையை பற்றவைத்து இருக்கிறது. அதாவது, புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணராஜ், தி.மு.க-வை சேர்ந்தவர் என்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வும் சென்னை தென்மேற்கு திமுக மாவட்ட செயலாளரான மயிலை த.வேலு-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தி.மு.க மேடையிலேயே எம்.எல்.ஏ வேலுவுக்கு சால்வை போடும் படங்களும் பகிரப்பட்டு வருகிறது.
‘ கிருஷ்ணராஜூக்கு அ.தி.மு.க-வில் பொறுப்பு கொடுத்ததே தவறு. அதுவும் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் என்ற உயரிய பொறுப்பு கொடுத்தது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல பல நியமனங்கள் நடந்திருக்கிறது. எனவே, இதுகுறித்து விசாரிக்கவேண்டும்’ என்று தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள் தென் சென்னை தெற்கு கிழக்கு ரத்தத்தின் ரத்தங்கள். இதை கவனத்தில் எடுத்தக் கொண்ட தலைமை, வேளச்சேரி அசோக்-கிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வேளச்சேரி அசோக்கிடம் விளக்கம் கேட்டோம். “இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் துடிப்பாக கட்சி பணியை ஆற்றி வருகிறார். அவர் வசிக்கும் சென்னை ராஜாகிராமணி தோட்டம் பகுதியின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுவை, எம்.எல்.ஏ-விடம் கொடுத்ததை, எம்.எல்.ஏ-வுடன் நெருக்கமென சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆனால், அதிமுக சார்பில் கோரிக்கை மனு எம்.எல்.ஏ-விடம் கொடுக்கப்பட்டதாக தி.மு.க வட்டச் செயலாளர் ஒருவரே பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு இருக்கிறார். இதுதான் நடந்த உண்மை. எனக்கு மாற்றுக்கட்சிகளில் இருப்பதுபோல உட்கட்சிக்குள் எதிரிகள் இருக்கிறார்கள். என் வளர்ச்சி பிடிக்காத அவர்கள், என்மீது திட்டமிட்டு அவதூறு பறப்புகிறார்கள். நிர்வாகிகள் நியமனம் மிக நேர்மையாக, வெளிப்படையாக நடக்கிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com