சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார், பிரேமலதா . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து கட்சிகளுடன் நட்பில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கவில்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
கர்நாடக தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் தான் பார்க்க வேண்டும் என்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றம் நாங்கள் இதில் தலையிட முடியாது என்கிறது. எந்த பகுதியிலும் காவிரியின் கடைமடைக்கு நீர் செல்லவில்லை. தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாவதைவிட கொடுமையான விஷயம் வேறு என்ன இருக்கிறது?. வேறும் தேர்தலுக்காவும், ஓட்டுக்காகவும் தான் அரசியல் செய்கிறீர்கள். மக்களுக்காகவோ, அடுத்த தலைமுறைக்காகவோ நீங்கள் அரசியல் செய்யவில்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதற்காக கர்நாடகத்தில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்புகின்றனர். இதேபோல், தமிழகத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழர் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். கேப்டன் செய்தது போல் தமிழக முதல்வர் அனைத்து கட்சிகளையும் அழைத்து சென்று பிரதமரையும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து நதிநீர் இணைப்பு குறித்து வலியுறுத்த வேண்டும். இந்த ஒருங்கிணைப்பை தேமுதிக முன்னெடுக்குமாறு கூறினாலும், நாங்கள் தயாராக இருக்கிறோம். துரைமுருகன் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று விட்டு வந்தார்.
அப்போது அவர், ‘3,000 கன அடி தண்ணீர் கொடுக்கிறார்கள். அதை சிக்கனமாக பயன்படுத்தி இந்த காலத்தை நாம் கடந்துவிட வேண்டும்’ என்கிறார். சிக்கனமாக எப்படி பயன்படுத்த முடியும்?. நீங்க வேணும்னா சிக்கனமா இருங்க… ஒரு மாத காலத்துக்கு தண்ணீர் குடிக்காமல் சிக்கனமாக இருந்து… அந்த தண்ணீரை சேமித்து மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருங்க. ஒரு ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தண்ணீர் என்ற கணக்கு இருக்கிறது. தண்ணீரே இல்லாத பொழுது சிக்கனமாக இருந்தால் நாம் வெளியில் வந்துவிடலாம் என்று எப்படி சொல்கிறார்?. எதுகேட்டலாலும் நான் சீனியர் மினிஸ்டர்… இவர்களுக்கெல்லாம் வரலாறு தெரியாது என்று வெறும் வாய் சவடால் தான் பேசுகிறார். 60 வருடமா கட்சியில் இருக்கிறீர்கள். என்ன செய்து இருக்கிறீர்கள்?.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக கூறினார்கள். இதுவரை எத்தனை பேருக்கு அந்த தொகை சென்றிருக்கிறது?. அனைத்து பெண்களுக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் பாதி பெண்களுக்கு செல்லவில்லை. இன்று தகுதி இருக்கும் பெண்களுக்கு தான் என்கிறார்கள். இதனால் பல குடும்பங்களில் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. கணவன் மார்கள், “தகுதியுடைய பெண்களுக்கு தான் ரூ.1000 என்றால் நீ தகுதி இல்லாத பெண் என அரசாங்கமே சொல்கிறது” என கூறுகிறார்கள். எதை வைத்து தகுதி என்று கூறுகிறீர்கள்?. என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக முதலில் கூற வேண்டும். பெண்கள் கேட்காத பஸ்யை கொடுப்பது. பிறகு ஓசி… ஓசி… என்பது. இது கண்டிக்கத்தக்கது” என கொதித்தார்.
ஆலோசனை கூட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள், “எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுக்கு மட்டும் ஆசைப்படக்கூடாது. வரும் காலங்களில் மக்களின் பிரச்னைகளை கையில் எடுத்து அதிகமாக போராட வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்போது மக்கள் நமக்கு தேவையானதை கொடுப்பார்கள். கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கேப்டன் தே.மு.தி.க-வை தொடங்கினார். அதன்படி நாம் சேவை செய்ய வேண்டும் என பிரேமலதா வலியுறுத்திருக்கிறார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com