திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், ஏற்கனவே இரண்டு ‘சிப்காட்’ தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிலங்களைக் கொடுக்க மறுத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்த அநீதி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கடும் எதிர்ப்புகளுக்கு பின்னர் குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் திடீரென வாகனங்களில் வந்து இறங்கிய ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என சிலர் ‘சிப்காட் வேண்டும்’ என வலியுறுத்துவதுபோல கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறையினரும் அனுமதி வழங்கி, பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பெரிதாக எடுபடவில்லை என சொல்லப்படுகிறது. சிலமணி நேரத்துக்குள்ளேயே கும்பல், கும்பலாக கலைந்து, வந்த வாகனத்திலேயே புறப்பட்டுச் சென்றதால், போராட்டம் புஸ்ஸாகிப் போனது. “சிப்காட் ஆதரவு போராட்டம் நடத்திய நபர்கள் விவசாயிகளே இல்லை. வெளியூர் நபர்களை அழைத்து வந்து தி.மு.க-வினரே போட்டிப் போராட்டத்தை நடத்தியதாக” செய்யாறு பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி, ஆளும்கட்சி மீது கொந்தளிக்கின்றனர்.
இது தொடர்பாக நர்ம பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த உமாவிடம் பேசினோம். “சிப்காட்டுக்காக நிலத்தை எடுக்கக் கூடாது என்றுசொல்லி, கொட்டும் மழையிலும் கடந்த 22-ம் தேதி போராட்டம் நடத்தினோம். அதற்கு எதிராக உள்ளூர் தி.மு.க ஆட்கள் வெம்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பக்கத்து ஊர்களில் இருந்து வெளி ஆட்களை கூட்டி வந்து சிப்காட்டுக்கு ஆதரவாக போராடச் செய்துள்ளனர். ஆண்களுக்கு ஒரு குவாட்டர் பாட்டில், 500 ரூபாய் பணம், பெண்களுக்கு ஒரு பொட்டலம் பிரியாணியும் 500 ரூபாயும் கொடுப்பதாக சொல்லிதான் மக்களை குட்டியானை வாகனத்தில் கூட்டி வந்து போராட்டம் நடத்தினார்கள்.
அருளைக் கூட்டி வந்து போராட்டம் நடத்தியதாக எங்களைக் குற்றம் சாட்டிய தி.மு.க-வினர் இப்போது சிப்காட்டுக்கு ஆதரவு இருக்கிறது என்று காட்டுவதற்காக வெளியூர்களில் இருந்து மக்களை கூட்டி வந்து போராடுவது எந்த வகையில் சார் நியாயம். இப்படி போராடும் தி.மு.க-வினர் மீதும் காவல்துறை குண்டாஸ் போட வேண்டியதுதானே? பதினோரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வெளியூரை சேர்ந்த மக்கள் ‘வேண்டும் வேண்டும் வேலை வேண்டும்… வேண்டும் வேண்டும் சிப்காட் வேண்டும்’ என்று போராடுவது உள்ளூர் மக்களான எங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது அராஜகமான போராட்டம். ‘சிப்காட்டிற்கு நிலம் எடுக்க மாட்டோம்’ என்று கூறி அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எங்கள் உயிரே போனாலும் நிலத்தை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். எங்கள் நிலத்துக்காக நாங்கள் போராடக் கூடாது என்கிறார்கள். இது, ஜனநாயக நாடு. எங்கள் போராட்டம் இன்னும் வீரியத்தோட தொடரும் சார் ” என்றார் ஆவேசமாக.
குற்றச்சாட்டுக் குறித்து, செய்யாறு தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ ஜோதியிடம் விளக்கம் கேட்டோம். “ரூ.500, குவாட்டர் கொடுக்கின்ற அளவுக்கு இங்கு யாருமில்லை. அன்புமணியும்தான் வெளியில் இருந்துதான் ஆட்களை அழைத்துவந்து அரசியல் செய்தார். ஒரு நாளைக்கு 100 பேர் சிப்காட்டில் வேலை வாங்கித் தருமாறு, என்னிடம் கேட்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும், வேலை வாய்ப்பு இன்னும் தேவைப்படுகிறது. படித்தவர்கள் பலர் இருக்கின்றனர். ஒருசிலருக்குப் பாதிப்பு இருக்கலாம். சுமார் ஆயிரம் ஏக்கருக்குமேல் நிலம் தரிசாகத்தான் கிடக்கிறது. அதெல்லாம் அரசுக்குச் சொந்தமான நிலம்தான். 20 வருடத்துக்கு முன்பு பட்டா கொடுத்ததால், இவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதில் அவர்கள் பயிர் வைத்ததே கிடையாது. அவர்களின் பாசன சொத்தும் கிடையாது.
பெரும்பாலும் குவாரி கிரஷர்கள்தான் செய்யாறு பகுதியில் இருக்கின்றன. 100 குவாரிகளுக்குமேல் செயல்படுகின்றன. பாதிப்பேர் ரியல் எஸ்டேட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். குவாரி நடத்துபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பா.ம.க அரசியல் செய்கிறது. நானும் விவசாயிதான். அவர்களெல்லாம் விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்தி, எங்கள் அமைச்சர் எ.வ.வேலுவையே இழுக்கின்றனர். இந்தப் பகுதி மூன்றுபோகம் விளைகிற பகுதியும் இல்லை. குவாரி நடத்தும் உரிமையாளர்கள், ஒரு சென்ட் ஐம்பதாயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய்க்கு இடத்தை கேட்பதால், பணத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com