தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி போராட்டம்:
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், மெத்தனப்போக்குடன் செயல்படாமல் காவிரை நீரைப் பெற்றுத்தர தீவிர நடிவடைக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி கைதாகினர். அதேபோல, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சை மாவட்டம் பூதலூரில், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதேபோல, டெல்டா மாவட்டங்கள் முழுக்க காவிரி கடைமடை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.எஸ்.எம்.இ போராட்டம்:
மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், நிலைக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம், கதவடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. மேலும், இந்தப் பிரச்னைக்கு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி வரும் அக்டோபர் 9-ம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றன.
போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மருத்துவப் படி உயர்வு, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50,000, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக தலைமையகங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்:
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றிவருவதாகவும், தி.மு.க தேர்தல் அறிக்கை 181-ல் வாக்குறுதி கொடுத்தபடி, பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றிவரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
என்.எல்.சி எதிர்ப்பு போராட்டம்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி) 2-வது விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து கடலூரி சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விருதாச்சலம் அருகிலுள்ள மும்முடிசோழகன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி முறையான மாற்று குடியிருப்பும், நிரந்தர வேலையும் வழங்கவில்லை. மேலும், குறைந்த இழப்பீட்டுத் தொகையையே தங்களின் நிலத்திற்கு கொடுத்துள்ளதாகவும், உடனடியாக மாற்று குடியிருப்பு, நிரந்த வேலை, புதிய நில இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையப் போராட்டம்:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கடந்த 430 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, விமான நிலைய திட்டத்துக்காக நீர்நிலைகளை ஆய்வு செய்ய வரும் உயர்மட்ட வல்லுநர் குழுவுக்கு எதிராக, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இதுதவிர, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் அணிவகுத்து வருகின்றன. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களை சரி செய்வதிலும், கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com