புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் தொடந்து விமர்சனம் செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தன்னுடைய மலிவு விளம்பரத்துக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வரக் கூடாது என்ற சதி அவரின் செயல்பாடுகளில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அண்ணாமலை பிறந்துகூட இருக்கமாட்டார். ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காகப் போராடி வாழ்ந்த அண்ணா, தந்தை பெரியார் போன்றவர்களைப் பற்றி அவர் பேசுவது அடிமுட்டாள்தனம். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக செயல்படக்கூடிய தகுதியோ, திராணியோ இல்லை என்பதை அவ்வப்போது அண்ணாமலைக்கு நிரூபித்து வருகிறார்.
அவர்மீது அவர் சார்ந்த கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், தனது மலிவு விளம்பரத்துக்காக அவ்வப்போது இது போன்று பேசி வருகிறார். அண்ணாவால் பகுத்தறிவு ஊட்டப்பட்ட அ.தி.மு.க-வினரின் வாக்குகளால்தான் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு மூன்று நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் அன்ணாமலை. அதனால்தான் அ.தி.மு.க-வால் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களை மறந்துவிட்டு, தேவையற்ற கருத்துகளைக் கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதன் மூலம் அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டுத் தலைவர் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் பற்றி விமர்சனம் செய்த அண்ணாமலை அவர்களுக்கு, புதுச்சேரியில் காலெடுத்து வைக்கும்போது சரியான பதிலடி கொடுக்கப்படும். தன்னுடைய உடலில் உள்ள கொழுப்பை அவ்வப்போது வாய்வழியாக வெளியிடுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நன்றி
Publisher: www.vikatan.com