புதுவை காமராஜர் நகர் வட்டார காங்கிரஸ் சார்பில், பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, “மக்களை பா.ஜ.க தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் புதுவையில் ரேஷன் கடைகள் கிடையாது. அதற்கு பதிலாக மக்களுக்கு தீமை விளைவிக்கும் மது பார்கள் தெருவுக்குத் தெரு உள்ளன. இடம் கிடைத்தால் இன்னும் பல மது பார்கள் திறக்கப்படும். ஆயிரம் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவுடன் இருக்கிறது, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு.
மக்கள் வரிப்பணத்தில் மதுபானக் கடையைத் திறக்கும் அரசு, பக்கத்தில் ஒரு ரேஷன் கடையைத் திறந்தால் என்ன… பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அனைத்து நல வாழ்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கு கொடுப்பதெல்லாம் நல்லது. ஆனால் புதுவையில் கெட்டதுதான் தருகிறார்கள். இப்படிப்பட்ட அரசு நமக்குத் தேவையா… மக்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள். கடந்த என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்கள். இப்போது அது யார் வீட்டிலாவது இருக்கிறதா… சண்டே மார்க்கெட்டில்கூட அதை வாங்க ஆள் இல்லை. அது ஓடாது என்பதால், பழைய இரும்புக் கடையில்கூட வாங்க மறுக்கிறார்கள்.
குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 என்ற திட்டத்தில், இன்னும் பலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ரங்கசாமி . இதுதான் ரங்கசாமியின் வித்தை. அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டால், நம் முன்பே அவர் அழுவார். தான் சொல்வதை யாரும் கேட்கவில்லை என ரங்கசாமி கூறுகிறார். உங்கள் பேச்சைத்தான் யாரும் கேட்கவில்லையே, அப்புறம் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டியதுதானே… பிரீபெய்டு மீட்டர் பொருத்த யார் வந்தாலும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் துரத்தி அனுப்புங்கள்.
கவர்னர் தமிழிசைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் நடப்பது குடும்பச் சண்டை. அண்ணன், தங்கைக்குள் எதற்காக சண்டை வருகிறது… பொங்கல் வரிசை வரவில்லை, தீபாவளி வரிசை வரவில்லை, ஆடி வரிசை வரவில்லை என்று தங்கை சண்டை போடுவார். இவர் போய் வரிசை வைத்தவுடன் சண்டை தீர்ந்துவிடும். சீர் செய்யவில்லை என்றால், தங்கை எதிர்க்கிறார். இதுதான் புதுவை அரசாங்கத்தில் நடக்கிறது. மதுபானம் மூலம் முதலமைச்சருக்கு வருமானம் வந்தால், அதிகாரிகள் நல்லவர்கள். தடுத்தால் அவர்கள் எதிரிகளாகி விடுகிறார்கள்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com