காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அதை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தும் அந்த விழாக்களில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாரும் இல்லை. இது ஏதோ போட்டி அரசாங்கம் நடப்பதுபோல் தெரிகிறது. ஒருபுறம் முதல்வர் ரங்கசாமி ஆட்சி, மற்றொருபுறம் ஆளுநர் தமிழிசை ஆட்சிபோல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் ஆளுநர் இந்த நிகழ்ச்சிகள் மூலம் பா.ஜ.க-வுக்கு விளம்பரம் தேடி வாக்கு சேகரிக்கிறார். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள், `மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செய்து முடித்துவிட்ட நிறைவு எனக்கு இருக்கிறது” என்று கூறுகிறார்.
இதன் மூலம் ரங்கசாமி அப்பட்டமான பொய்யை மக்கள் மத்தியில் கூறுவது தெளிவாக தெரிகிறது. `புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம், மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் கோடி பெறுவோம், மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுப்போம், மாநில அரசு வாங்கிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்வோம், அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் கொடுப்போம், 10,000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம்’ என பல வாக்குறுதிகளை கொடுத்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வாங்கியதில் இமாலய ஊழல் நடந்துள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com