தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 6 – 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 15ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடக்கின்றன. அனைத்துப் வகுப்புகளுக்கும் 27ஆம் தேதி தேர்வுகள் முடிந்து, அதன்பிறகு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழக பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) அமைப்பானது 2023-24ஆம் கல்வியாண்டில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
காலாண்டு தேர்வு விடுமுறை உட்பட 7 நாட்கள் நடத்திட உரிய திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும். குறிப்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தங்களின் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் செயல்பட்டு வரும் பள்ளிகள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குழு சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 25 முதல் 27 வரை ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சியும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com