மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், ரஜினி, கமல், விஜய் ஆகியோரிடம் ஆதரவு கேட்போம் எனவும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று தெரிவித்திருக்கிறார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தேர்தல் பணிகளை பா.ஜ.க ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஒரு கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களிடம், கட்சி மற்றும் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் கொண்டுசேர்ப்பதற்கான தொடர்பு இயக்கத்தை, பிப்ரவரியில் கட்சி தொடங்கவிருக்கிறது. மேலும், `கிராமத்துக்குச் செல்வோம்’ என்ற அடுத்த நிகழ்ச்சியையும் பிப்ரவரியில் கட்சி தொடங்கவிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருந்த நிதிஷ் குமார், என்.டி.ஏ கூட்டணிக்கு வந்திருக்கிறார். 10 நாள்களுக்கு முன்பு அந்தக் கூட்டணியில் இருந்த புள்ளிகள் எல்லாம், இப்போது எப்படி பிரிந்து போகின்றன என்பதைப் பார்க்கிறோம். இந்தியா கூட்டணி என்பது அவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்தக் கூட்டணி நிலைக்காது எனக் கூறிவந்தோம். அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குறிக்கோளே, பா.ஜ.க மற்றும் மோடியை எதிர்ப்பதே தவிர மக்கள் நலன் அல்ல. மக்களின் நலனைச் சிந்திக்காத கூட்டணி இப்போது சிதறிக் கொண்டிருக்கிறது.

கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணியில் ஒவ்வொரு நாளும் புதிய கட்சிகளை பா.ஜ.க சேர்த்துக்கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இந்தியா கூட்டணியில் இருக்கும் பலர் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க, பா.ஜ.க மீண்டும் இணையுமா என்ற கேள்விக்கு, “ `திரும்ப வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா’, `திரும்ப வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?’ போன்ற விஷயங்களுக்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். ஆனால், யார் வந்தாலும், நாட்டுக்காக இணைந்து வேலை செய்ய பா.ஜ.க தயாராக இருக்கிறது” என வானதி பதிலளித்தார்.
மேலும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தன்னுடைய தந்தையை சங்கி என அழைப்பது வருத்தமளிப்பதாகக் கூறியது குறித்து பத்திரிகையாளர் கேள்வியெழுப்பியபோது, “எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள், பிறரை இழிவுபடுத்துவதற்காக `சங்கி’ என்பதைப் பயன்படுத்திவருகிறார்கள். இதில், ஒரு சிலர் `ஆமாம், நான் பெருமைக்குரிய சங்கி’ என்றும் சொல்கிறார்கள். எங்களைக் கேட்டால், இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களை சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும், இந்திய நாட்டின் குடிமக்கள் அவர்களை `சங்கி’ என்று சொல்வதைப் பெருமை என்று சொல்வோம்” என்றார்.

`அப்படியென்றால் ரஜினியின் மகள் எதற்காக தன் தந்தை சங்கி இல்லை என்று பதிவுசெய்ய வேண்டும்’ என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, “தெரியவில்லை, அதற்கு நான் என்ன பதில் சொல்வது” என வானதி கூறிவிட்டார். இறுதியாக, `ரஜினி, விஜய் ஆகியோரிடம் ஆதரவு கேட்பீர்களா?’ என்ற கேள்விக்கு, “ரஜினி, கமல், விஜய் என எந்த நடிகராக இருந்தாலும் ஆதரவு கேட்போம். அதுதான் எங்கள் வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவர்களது விருப்பம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com