மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் லட்சியங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் இந்தத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். அதோடு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இதில் கலந்துகொள்வார்களா என்பது உறுதியாகவில்லை. அதேசமயம், பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை கலந்துகொள்ளும் இந்த மத நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மதம் மாற்றப்படக் கூடாது என்றும், இந்திய ஜனநாயக அரசு மதம் சார்ந்ததாக இருக்கக் கூடாது என்றும் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தங்கள் தரப்பிலிருந்து யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துவிட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும், இதே குற்றச்சாட்டுகள் பா.ஜ.க-மீது முன்வைக்கப்படுகின்றன.
நன்றி
Publisher: www.vikatan.com