ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. காசா முனையிலிருந்து எகிப்த்தின் ராஃபா எல்லையில் அவர்கள் விடப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அதிகாரியும் முன்னாள் காஸா சுகாதாரத்துறை அமைச்சருமான பஸீம் நைம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,“ஆறு நாள்கள் போர் இடைநிறுத்தம், இன்று காலையில் முடிவடைகிறது. ஆனால், இந்தப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் சிறையில் இருக்கும் எங்கள் நாட்டின் கைதிகள் அனைவருக்கும் ஈடாக, எங்களிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் அனைத்து ராணுவ வீரர்களையும் விடுவிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நிரந்தர போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்களுடன் நாங்கள் முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தற்போது வரை இஸ்ரேல் சிறைகளில் 7,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இருப்பதாக, மனித உரிமைகள் ஆர்வலர் குழுக்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதுவரை இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களைவிட அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com