கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில், தி.மு.க தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை ராபின்சன் உட்பட 15 பேர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து, இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நேற்று முன்தினம் கல்குளம் தாசில்தார் தலைமையில் போலீஸார், சேவியர் குமார் உடலை நீதிமன்ற ஆணைபடி மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். தி.மு.க ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு தலைமறைவாக உள்ளார். கொலைசெய்யப்பட்ட சேவியர் குமார் வீட்டுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்றார். சேவியர் குமாரின் கல்லறையில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சேவியர் குமாரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தி.மு.க ஒன்றிய செயலாளரக இருந்த ரமேஷ் பாபு உட்பட கொலையாளிகளை கைதுசெய்வதில் காவல்துறை தாமதம் காட்டுவதாக குற்றம்சாட்டி, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். இதில் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கொலை நடந்து இத்தனை நாள்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது, தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை எனக் கூறி அடித்து கொலைசெய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மாதா சிலையால் அடித்து கொன்றிருக்கிறார்கள். இது போன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது. சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீஸார் இதுவரை விசாரிக்கவில்லை. காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை, பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடுகிறது அரசு, கொலைக்கு என்ன தண்டனை… இவ்வளவு பெரிய உளவுத்துறை, காவல்துறையை வைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் எனச் சொல்ல அதிகாரம் தேவையா… என்னக் கொடுமை இது.
நன்றி
Publisher: www.vikatan.com