இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றப் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நவம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பெயர் குறிப்பிடவேண்டாமென்ற நிபந்தனையோடு அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாதென்ற தடையும் சேர்ந்தே விலகியிருக்கிறது. சுடுகாட்டு ஊழலை முதலில் பேசியதே தி.மு.க-தான். ஆனால், தற்போது செல்வகணபதி தி.மு.க-வில் இருப்பதால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்போ, தி.மு.க தரப்போ மேல்முறையீடு செய்யப்போவதில்லை.
ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ நிச்சயம் மேல்முறையீடு செய்யும். அப்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்தால், செல்வகணபதிக்கு நிச்சயம் சிக்கல்தான். சி.பி.ஐ-யின் அணுகுமுறையைப் பொறுத்தே, செல்வகணபதியின் எதிர்காலம் இருக்கிறது” என்றார் விரிவாக.
தற்போது கட்சிப் பதவியில் மட்டும் இருக்கும் செல்வகணபதிக்கு, இந்தத் தீர்ப்பு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம். “அண்ணன் பழையபடி அரசியல்’ல இறங்கப்போறார்” என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். அதன்படி, “வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே சேலம் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார் செல்வகணபதி” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். ஆனால், “தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இந்நேரத்தில், செல்வகணபதிக்குச் சாதகமாக தீர்ப்பு வந்து, வேட்பாளர் ரேஸில் அவரையும் குதிக்க வைத்திருக்கிறது காலம். இதை தலைமை எதிர்பார்க்கவில்லை. அவருக்கான செல்வாக்கு எப்படி இருக்கிறதென்று மீண்டும் ஒரு மினி சர்வே எடுத்தால் மட்டுமே, செல்வகணபதி சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது தலைமை கையில்தான் இருக்கிறது” என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
நன்றி
Publisher: www.vikatan.com