தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது செண்பகவல்லி அணை. 5,000 அடி உயரத்திலுள்ள அணையை அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன், சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன் 1783-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு, கட்டினார். அந்தப் பகுதியிலுள்ள காட்டாற்று வெள்ளம், பள்ளமான கேரளப் பகுதிக்குள் செல்வதைத் தடுத்து, தமிழக பகுதிக்குள் திருப்பி விடுவதற்காகவே அணை கட்டப்பட்டிருந்தது.
அதேபோல் அணையின் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அணையிலிருந்து வரும் தண்ணீர் வாசுதேவநல்லூர் தலையணையை அடைந்து அங்கிருந்து இராசிங்கப்பேரி, குலசேகர ஆழ்வார் கால்வாய்களின் வழியாக வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி வரை தண்ணீர் செல்லும்.


இதனால் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவந்தது.1955-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அணையில் சேதம் ஏற்பட்டது. அப்போது காமராஜர் ஆட்சிக்காலத்தில் சீர் செய்யப்பட்டது. வெள்ளத்தின் காரணமாக மீண்டும் அணையில் 1967-ம் ஆண்டு 30 மீட்டர் தூரத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகப் பகுதிக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்று போய்விட்டதால், பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டன.1985-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் உடைப்பை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசு சார்பில் திட்ட மதீப்பீடு தயாரிக்கப்பட்டு மொத்தம் 10.5 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டதால் இரு மாநில அரசுகளும் பங்கீட்டு கொள்ளும் விதமாக தமிழக அரசின் சார்பில் 5.25 லட்சம் கேரள அரசிடம் கொடுக்கப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com