டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது. இத்தகைய சம்பவம் நடந்த நாளிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும், `பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிக்கை வெளியிட வேண்டும்” என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்திவருகின்றனர்.
நாடாளுமன்றத்திலிருந்து கனிமொழி, சு.வெங்கடேசன், டெரிக் ஓ பிரையன் உட்பட மக்களவை, மாநிலங்களைவை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 141 பேர் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “மக்களைப் பற்றியும், பாதுகாப்புப் பற்றியும் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் குரலை நசுக்குவது, அவர்களை சஸ்பெண்ட் செய்வது என்ற நோக்கத்துடன் அவை செயல்படுகிறது. விவாதங்களுக்காகவோ, கலந்துரையாடலுக்காகவோ அல்ல” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com