திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். மனஅழுத்தம், பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டார். இதனால் அவர் தனது கருவை கலைக்க முடிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9ஆம் தேதி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது.
ஆனால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை வழங்கினர். நீதிமன்றம் எப்படி கருவின் இதயத்துடிப்பை நிறுத்தும்படி கூற முடியும் என்பதை கூறி கருவை கலைக்க நீதிபதி ஹிமா கோஹ்லி அனுமதி மறுத்தார். அதேவேளையில் நீதிபதி பிவி நாகரத்னா, பெண்ணின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு என்பது 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது உச்சநீதிமன்றம், ”மனுதாரர் ஏற்கனவே 26 வாரங்கள் காத்திருந்துள்ளார். இன்னும் சில வாரங்கள் காத்திருக்க முடியுமா?. எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடம் கருவின் இதயத்துடிப்பை நிறுத்தி விடுங்கள் என எங்களை கூற வைக்க விரும்புகிறீர்களா?” என வருத்தத்தோடும், காட்டமாகவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் அந்த பெண்ணின் நிலைமை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம், ”கருவில் இருக்கும் குழந்தையை கொல்ல முடியாது. அதேவேளையில் இது தாயின் உரிமையை கருத்தில் கொண்டு அணுக வேண்டும்” எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை விசாரணை நடத்த உத்தரவிட்டு ஒத்திவைத்தது.
நன்றி
Publisher: 1newsnation.com