சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் பலத்த மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால், தீஸ்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது. பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர்.
கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 53 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் சிக்கிமில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைத்தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவரது பதிவில், “சிக்கிமில் பனிப்பாறை ஏரி வெடித்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 8 ராணுவ வீரர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. காணாமல் போன 23 ராணுவ வீரர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், எட்டு துணிச்சலான வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் தியாகம், தேசத்தின் சேவையில் முன்னோக்கிச் செல்லும் போது, மறக்க முடியாது. மீதமுள்ள 14 ராணுவ வீரர்கள் மற்றும் காணாமல் போன பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்று ராஜ்நாத் சிங்க் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SSDMA) அறிக்கையின்படி, இறப்பு எண்ணிக்கை 26 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் 142 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 2413 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 1203 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com