தெலங்கானாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 64 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், முதல்முறையாக அங்கு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதில், காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய, காங்கிரஸின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியே, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சிக்குள் பேச்சுக்கள் எழுகிறது. கட்சியும்கூட, அந்த நோக்கத்திலேயே முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக காமாரெட்டி தொகுதியிலும், கூடுதலாக கோடங்கால் தொகுதியிலும் அவரை வேட்பாளராகக் களமிறக்கியது.

இதில், காமாரெட்டி தொகுதியில் தோற்றாலும்கூட, கோடங்கால் தொகுதியில் ரேவந்த் ரெட்டி வெற்றிபெற்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெறவிருந்த முதல்வர் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னால், ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, மல்லு பாட்டி விக்ரமார்கா, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, கோமதிரெட்டி சகோதரர்கள் ஆகிய மூத்த தலைவர்கள், ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவியை வழங்குவதை எதிர்ப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.
இருப்பினும், சில எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பாட்டி விக்ரமார்கா, உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு ஆகியோரை முதல்வராக்கலாம் என்று பரிந்துரைத்தாகவும், பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ரேவந்த் ரெட்டியை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழா தாமதமாவதற்கு இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானாவின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்க ராவ் தாக்ரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சித் தலைமையிடம் ஆலோசிக்கவுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு இறுதி முடிவு மல்லிகார்ஜுன கார்கே எடுப்பார் என்றும், அது என்ன முடிவாக இருக்கும் என்று இன்றைக்குள் தெரிந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஒருவேளை, ரேவந்த் ரெட்டி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநில காங்கிரஸின் தலைவர் பதவி வேறு ஒரு மூத்த தலைவருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட கர்நாடகாவில் ஏற்பட்ட சூழல்தான் தற்போது தெலங்கானா காங்கிரஸிலும் நிலவுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com