திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலானது, `பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியக் கோயிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி விழாவானது, விமர்சையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதியன்று விமர்சையாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் கோயில் தரப்பிலிருந்து, வரும் ஏகாதசி விழாவன்று, பக்தர்கள் அரங்கநாதரை சந்தனு, கிளி மண்டபங்களிலிருந்து தரிசிக்க ரூ.4,000, 700 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்த அறிவிப்பில், ‘இந்தத் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, சந்தனு மண்டபம் நுழைவுச் சீட்டு கட்டணம் ரூ.4,000, கிளி மண்டபம் நுழைவுச் சீட்டு ரூ.700 ஆகிய சீட்டுகள் பெற விரும்புவோர், 05.12.2023-ம் தேதிக்குள் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 05.12.2023-ம் தேதிக்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது – திருக்கோயில் நிர்வாகம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறி, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின்போது, இதேபோல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய, கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுவதாகக் கூறி, புகார் எழுந்தது. ஆனால், அறநிலையத்துறை தரப்பிலிருந்து, ‘இது உண்மைக்குப் புறம்பான செய்தி. அதிக கட்டணம் வசூலிக்கவில்லை’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு திருச்செந்தூர் கோயிலுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்த தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி, “திருச்செந்தூர் கோயிலில் எந்தக் கட்டணமும் உயர்த்தபடவில்லை. 2018-ல் அ.தி.மு.க ஆட்சியில் உயர்த்தப்பட்ட கட்டணம்தான் இன்று வரை தொடர்கிறது” என்று பேட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த சூழலில்தான், ஸ்ரீரங்கம் கோயிலில் ஏதாதசி விழாவில் அதிக கட்டணம் வசூலிக்க அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாக, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com