தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். இதற்கு காரணம், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓர் சபதம்தான்’ என்று சிலாகித்துக் கொள்கிறார்கள் அ.தி.மு.க மூத்த தலைவர்கள். 2006-11 தி.மு.க ஆட்சிக்காலத்தில் உயர்க்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று தனது அமைச்சர் பதவியை இழந்து இருக்கிறார்.
பொன்முடி அமைச்சர் பதவியை இழக்க காரணமாக இருந்தது ஜெயலலிதா தொடர்ந்த வழக்குதான். தற்போது திமுக அமைச்சர்கள் பலர் மீது சொத்துகுவிப்பு வழக்கு இருந்தும் பொன்முடி சிக்கி கொண்டதற்கு அதிமுக சீனியர்கள் ஒரு கதை சொல்கிறார்கள்.

அதுகுறித்து அ.தி.மு.க-வின் மோஸ்ட் சீனியர் புள்ளி ஒருவரிடம் பேசினோம். தற்போதைய தி.மு.க ஆட்சிமீது சில விமர்சனங்களை முன்வைத்து, பொன்முடி குறித்த உரையாடலை தொடர்ந்தார். “1996 முதல் 2000 வரை அம்மாவுக்கு சோதனை காலம்தான். 1996 ஜூலையில்தான் அம்மா மீது சொத்து குவிப்பு வழக்கை தாக்கல் செய்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த காலகட்டத்தில் அம்மா மீது ஏகப்பட்ட வழக்குகளை அள்ளி எறிந்தது திமுக. அப்போது திமுக அரசின் சட்டத்துறை அமைச்சராக இருந்தது ஆலடி அருணா என்று நினைக்கிறேன்.
அம்மா மீது போடப்பட்ட 47 வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தார். அந்த வழக்கு ஒருபக்கம் நடந்துக் கொண்டு இருந்தாலும், அம்மாவின் செல்வாக்கும் அதிகமானது. அதனால்தான், 2001-ல் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனாலும், வழக்குகள் சூழ்ந்து கொண்டதால், 2006-ல் தோல்வி.
இந்த காலகட்டத்தில்தான் அம்மா மீது தனிப்பட்ட விமர்சனங்களை திமுக செய்தது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பொன்முடிதான். தற்போது ஸ்டாலின் குறித்து விமர்சனம் எழும்போதெல்லாம், தங்கம் தென்னரசு பதிலளிப்போதுபோல, அப்போது கருணாநிதி குறித்து அம்மா விமர்சிக்கும்போதெல்லாம், பொன்முடிதான் முந்திக் கொண்டு வருவார்.

2007 வாக்கில் பொதுமேடை ஒன்றில் அம்மாவை ‘வாய்தா ராணி’ என்று விமர்சனம் வைத்துவிட்டார் பொன்முடி. உண்மையில் அந்த வார்த்தையை முதலில் உருவாக்கியது யாரென்று தெரியாது. ஆனால், பொன்முடிதான் அதை பிரபலப்படுத்தினார். அன்றுமுதல் திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் அந்த வார்த்தையை சொல்லியே அம்மாவை விமர்சிக்க தொடங்கினார்கள்.
அது அம்மாவை பர்ஸ்னலாக ரொம்பவே பாதித்துவிட்டது. சசிகலாவையும்தான். அதேபோலதான் 2011 கருணாநிதியை ஊழல் பேர்வழி என்றும் அவர் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தையும் கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா வர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அறிக்கை வெளியிட்டது பொன்முடிதான். அதில் ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அப்போது ஜெயலலிதா சொன்ன வார்த்தை, ‘ He talks too much. He should pay the price for this. Surely i will punish ponmudi.’ என்பதுதான்.

அதற்கு முதலில் பொன்முடியை தேர்தலில் தோற்கடித்தாக வேண்டுமே. 1996, 2001, 2006 என மூன்று முறை விழுப்புரத்தில் வெற்றிப் பெற்று மிக பலமாக இருந்தார் பொன்முடி. அவரை தோற்கடிக்க சரியான ஆள் வேண்டுமல்லாவா… அப்படி தேர்வானவர்தான் சி.வி.சண்முகம். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். திண்டிவனம் தொகுதியில் இரண்டு முறை வெற்றிப் பெற்ற சண்முகத்தை விழுப்புரத்தில் நிறுத்த முடிவானது. அப்போது சண்முகம் கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனால், மறுப்பு தெரிவிக்கமுடியவில்லை. விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டு, அவரிடம் அம்மா சொன்னது ‘சண்முகம் உன்னால முடியும்… ஜெயிச்சுட்டுவா…’ என்றுதான்.
சொன்னதுபோலவே பொன்முடி தோற்கடிக்கப்பட்டார். இதன்பின் பொன்முடி காலி செய்யும் பொறுப்பு சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்கிறது. 1.75 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம், பூந்துறையிலுள்ள செம்மண் குவாரியை, முறைகேடாகத் தன்னுடைய மகன் கௌதம சிகாமணிக்கு வழங்கியதாகவும், இதன் மூலம் ரூ.28.38 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் 2012 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளை முன்னின்று பார்த்துக் கொண்டது சி.வி.சண்முகம்தான்.

2016-ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலையானபோதும், அம்மா இறந்தபின்னரும் பொன்முடியை சண்முகம் விடவில்லை. சட்டத்துறையை கையில் வைத்து இருந்ததால், 2017-ல் மேல்முறையீடு செய்து எல்லா ரூபத்திலும் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட வைத்தார். அந்த வழக்கில்தான் தற்போது பொன்முடிக்கு தண்டனை கிடைத்து இருக்கிறது. அதேபோல் செம்மண் வழக்கும் அமலாக்கத்துறையின் கையில் வசமாக சிக்கியிருக்கிறது. ஒருவேளை அம்மாவை பொன்முடி கடுமையாக விமர்சிக்காமல் இருந்திருந்தால், அவருக்கு இப்போது சிக்கல் வந்திருக்காதா என்றால் அதற்கு பதில் இல்லை. ஆனால், பொன்முடி தனது வரம்பு மீறிய பேச்சால்தான் தற்போது அவதிப்படுகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.” என்றார் விரிவாக..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com