சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஏன் இந்த பணியிட மாற்றம்? வழக்கமான நடைமுறையா? அல்லது அரசியல் அழுத்தம் காரணமா? – அலசுவோம்.
கடந்த செவ்வாய்கிழமை, தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதில், 10 மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும், எம்.சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, பொள்ளாச்சி சார் ஆட்சியராக இருந்த பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராககவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராகவும், கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் என அடுத்தடுத்து பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராகவும், அந்த பொறுப்பில் இருந்த அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுமட்டுமல்லாமல், அக்டோபர் 11-ம் தேதி 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. இதேபோல, செப்டம்பர் மாதத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஜூலை, ஜூன் மாதத்தில் என ஒவ்வொரு மாதமும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த இடமாற்றங்களுக்கான காரணங்கள் குறித்து அரசுத் துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “பொதுவாக அரசுத்துறையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் என்பது வழக்கமான ஒரு நடைமுறைதான். அதாவது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிடத்தில் இருக்கக் கூடாது என்பார்கள். ஆனால், சம்மந்தப்பட்ட துறையில் சிறப்பாக செயலாற்றுவதைப் பொறுத்து அதே பதவியில் நீட்டிக்கவும் செய்யப்படுவார்கள் அல்லது அதைவிட மேலான ஒரு பொறுப்புக்கு புரமோஷனும் செய்யப்படுவார்கள். இதுதான் வழமையான நடைமுறை.
ஆனால், அரசியல் அழுத்தத்தால் சில நேர்மையான அதிகாரிகளும் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவதும் உண்மைதான். உதாரணமாக, தற்போது சிவகாசி மாநகராட்சியை எடுத்துக்கொள்ளாம். அங்கு மேயருக்கும் பெரும்பான்மையான கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நிலவியது. ஆனால் அங்கு ஆணையராக இருந்த சங்கரன் ஐ.ஏ.எஸ், மேயருக்கு ஆதரவாக செயல்படுவாராம். மேலும் மேயருக்கு ஆதரவாக உள்ள கவுன்சிலர்களின் வார்டுகளில் தான் பணிகள் துரிதமாக நடக்குமாம். மற்ற இடங்களை கண்டுகொள்வதில்லை உள்ளிட்ட காரணங்களால் ஆளும்கட்சி கவுன்சிலர்களைப் பகைத்துக்கொண்டார். இதனால் எரிச்சலடைந்த தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டங்களை புறக்கணித்ததோடு, `ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் இல்லையென்றால் கட்சி மாறிவிடுவோம்’ என அமைச்சர்கள் சிலரிடம் வலியுறுத்தியிருக்கின்றனர். இதையடுத்து சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரன் பதவியேற்ற 6 மாதத்துக்குள்ளாகவே மாற்றப்பட்டு, ஆவடி மாநகராட்சி உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது முழுக்க அரசியல் காரணம் தொடர்பானது.
அதேபோல நிர்வாகக் காரணத்துக்கான இடமாற்றத்தைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகள் முழுமையாகப் பூர்த்தி ஆனாலோ அல்லது ஒரு துறையில் சம்மந்தப்பட்ட அதிகாரி திறம்பட செயலாற்றவில்லை அல்லது அவர்மீது தொடர்ச்சியான புகார்கள் எழும் பட்சத்தில் அவர் வேறொரு துறைக்கு மாற்றப்படுவார். அப்படி மாற்றப்படும் இடத்தில் ஏற்கெனவே பணியாற்றிவந்த அதிகாரி சிறப்பாக செயலாற்றினாலும், அவர்மீது சொல்லும்படியாக எந்த குறைகளும் இல்லையென்றாலும்கூட அவர் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது தவிர்க்க முடியாதது.
உதாரணமாக, தற்போது வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர்மீது பெரிதாக எந்தப் புகாரும் இல்லை; ஆனால் ஏற்கெனவே வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக இருந்துவந்த அபூர்வா ஐ.ஏ.எஸ் மீது சில விமர்சனங்கள் எழுந்ததால் அவர் அந்ததுறையிலிருந்து மாற்றபப்பட்டிருக்கிறார். அதேநேரம் அந்த இடத்துக்கு புகார்கள் பெரிதளவில் ஏதும் இல்லாத, மேலிடம் கொடுக்கக்கூடிய வேலையை செய்து முடிக்கக்கூடியவராக இருக்கக்கூடிய சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்ஸை தேர்ந்தெடுத்து நியமித்திருக்கின்றனர்.
இந்த இரு உதாரணங்களைப் பொருத்திப்பார்த்தாலே, இதுபோன்ற இடமாற்றங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் ஒன்று `நிர்வாகக் காரணம்’, மற்றொன்று `அரசியல் காரணம்’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்!” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com