மிஸோரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்றைய தினம், ஒரே கட்டமாக நடைபெறவிருந்தது. இதற்கிடையில் மிஸோரம் மாநிலத்துக்கு மட்டும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது. நேற்றைய தினம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில் தெலங்கானாவைத் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், மிஸோரம் மாநிலத்தில் இன்று காலை 8 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் மாநில சட்டசபைக்கு, கடந்த மாதம் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 80 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகளுடன் 13 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவிருப்பதாக, மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com