கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று மாலை அத்திப்பள்ளி பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை ஒன்றில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய பட்டாசுகளால், அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பலமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இந்தக் கோர விபத்தில் அந்தப் பட்டாசுக்கடையில் பணிபுரிந்தவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உடல் கருகி பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 15 வாகனங்களும் தீக்கிரையாகின. பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெடி விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com