`மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு’ – திமுக – காங்கிரஸ் இன்று ஆலோசனை!
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் கூட்டணி குறித்த முடிவுகளை இறுதி செய்துவரும் அரசியல் கட்சிகள், மாநில அளவில் தொகுதி பங்கீடு வேலைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. உ.பி-யில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் – தி.மு.க ஆகிய கட்சிகளின் `தேர்தல் தொகுதி பங்கீடு” குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையிலான `கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக் குழு’வும், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் `தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டு குழு’வும் பங்கேற்கவிருக்கின்றன. இந்தக் குழுவில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com